Lead NewsLocal

பொறுப்புக்கூறுவதற்கு அரசிடம் உள்ளூர்ப் பொறிமுறை உண்டா?

 

– போர் நிறைவுற்று 10 ஆண்டுகள் கடந்தும் அதற்காக
    எதுவுமே செய்யப்படவில்லை என்கிறார் சுமந்திரன்

“உள்நாட்டுப் பொறிமுறையின் கீழ் பொறுப்புக்கூறலை நிறைவேற்ற இலங்கை அரசு இதுவரை என்ன செய்துள்ளது? போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் கடந்துள்ளபோதும் பொறுப்புக்கூறலை நிறைவேற்ற அரசு ஏதும் நடவடிக்கை எடுத்ததா?”

– இவ்வாறு சபையில் கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்.

சர்வதேச நீதிபதிகள் வருவதை நிராகரிக்கும் அரசு உள்ளூர்ப் பொறிமுறை எதனையும் இதுவரை நிறுவவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இறுதிப் போர் நிறைவடைந்து பத்தாண்டுகளாகின்ற போதிலும் பொறுப்புக்கூறலை நிறைவேற்ற இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாக இல்லை. பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவது தொடர்பாக பேச்சுகள் மட்டும் தொடர்ந்து வருகின்றன.

இந்தத் தருணத்தில் அரசிடம் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன். உள்நாட்டுப் பொறிமுறையின் கீழ் பொறுப்புக்கூறலை நிறைவேற்ற அரசு இதுவரை என்ன செய்துள்ளது?

போர் நிறைவடைந்த பின்னர் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்துள்ளனர் என அரசால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இதுவரை ஒரு விசாரணையேனும் முன்னெடுக்கப்பட்டுள்ளதா? சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என அரசு கூறுகின்றது. ஆனால், உள்ளூர்ப் பொறிமுறையின் கீழும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. இதுவொரு தீவிர பிரச்சினையாகும்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading