FeaturesLead NewsLocal

ஜனாதிபதித் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு!

இலங்கையின் 8ஆவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் நாளை சனிக்கிழமை நாடு முழுவதும் நடைபெறுகின்றது. என்றுமில்லாதவாறு இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதேவேளை, ஒரு கோடி 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

கடுமையான போட்டிக்கு மத்தியில் மக்கள் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நாளை தமது வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற இருக்கின்றார்கள்.

தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளன எனத் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அந்தந்த மாவட்ட செயலகங்களிலிருந்து இன்று காலை 7 மணி முதல் பொலிஸாரின் கடும் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.

நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் வாக்களிப்பு நேரமாகும். வழமையாக மாலை 4 மணியுடன் முடிவடையும் வாக்களிப்பு இம்முறை ஒரு மணி நேரம் நீடிக்கப்பட்டு 5 மணி வரை இடம்பெறவுள்ளது.

மாலை வரை நேரம் இருப்பதாக எண்ணிக்கொண்டு தாமதப்படுத்தாமல் காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களித்துவிட்டு அமைதியாக வீடு திரும்ப வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவும் பொலிஸ் திணைக்களமும் அறிவுறுத்தல் வழங்கியிருக்கின்றன.

முடிந்தவரை அமைதியைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்காக நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கான சூழல் உறுதிசெய்யப்பட்டுள்ளது எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது.

அனைத்து மக்களும் தமது வாக்குரிமையைக் கட்டாயம் பயன்படுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் அதிகமான வேட்பாளர்கள் இம்முறை போட்டியிடுவதால் மிக நீளமான இரண்டு அடி வாக்குச்சீட்டே வாக்களிப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading