Lead NewsLocal

இனியொரு கறுப்பு ஜூலை வந்தால் இலங்கை இரண்டாகப் பிளவடையும்! – ரெலோ எச்சரிக்கை

“கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டால் மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை உருவாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் டிலான் பெரேரா கூறியுள்ள கருத்து தெரு சண்டைக்காரனின் கருத்துப்போல் உள்ளது. கறுப்பு ஜூலை அல்ல எதனையும் எதிர்கொள்ள தமிழர்கள் தயார். அப்படி ஒரு கறுப்பு ஜூலை வந்தால் இனி இந்த நாடு இரண்டாக உடைவதிலேயே முடியும்.”

– இப்படி எச்சரிக்கை செய்துள்ளார் ரெலோ அமைப்பின் செயலாளர் என்.சிறீகாந்தா.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கொழும்பில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த டிலான் பெரேரா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலப்பு நீதிமன்றப் பொறிமுறையைக் கேட்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலப்பு நீதிமன்ற பொறிமுறையைக் கேட்டால் மீண்டும் கறுப்பு ஜூலை ஒன்று உருவாகும் எனக் கூறியிருக்கின்றார். அதன் அர்த்தம் ஐ.நாவில் நாங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்வோம், இலங்கையில் என்ன வேண்டுமானாலும் செய்வோம், நீங்கள் பொத்திக் கொண்டு இருக்கவேண்டும் என்பதுதான்.

கறுப்பு ஜூலை என்பது 1983ஆம் ஆண்டு தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறி. அதுவே இந்த நாட்டில் 26 வருடங்கள் நீடித்த மிக மோசமான யுத்தத்துக்கு வழிகோலியது. அந்த யுத்தத்தில் 2 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள்.

தமிழ், சிங்களத் தரப்பில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உயிரிழந்தார்கள். பலர் அங்கவீனமாக்கப்பட்டார்கள். பலர் காணாமல் போனார்கள். இவற்றுக்கெல்லாம் மூல காரணம் கறுப்பு ஜூலை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

டிலான் பெரேராவின் கருத்து சந்திச் சண்டியன்களின் கருத்துப்போல் இருக்கின்றது. உண்மையில் டிலான் பெரேரா இலங்கையில் உள்ள மக்களை நேசித்திருந்தால் கறுப்பு ஜூலை என்ற வார்த்தையை உச்சரிப்பதற்கே அவருக்கு வாய் கூசியிருக்கவேண்டும். ஆனாலும், கூச்ச நாச்சம் இல்லாமல் அவர் அந்த கருத்தைக் கூறியுள்ளார்.

அவருக்கு நாங்கள் கூறவிரும்புவது, கறுப்பு ஜூலை அல்ல, அதனைவிட மோசமான சம்பவங்களையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ள தயார். தமிழ் மக்களின் நீதிக்கான எதிர்பார்ப்பின் முன்னால் கறுப்பு ஜூலை என்பது ஒன்றுமே இல்லை.

கறுப்பு ஜூலையை காட்டி தமிழர்களை அச்சுறுத்தும் எண்ணம் இருந்தால் அது வெறும் கனவு மட்டுமே என்பதை டிலான் பெரேரா நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வந்தால், அது முள்ளிவாய்க்காலில் முடியாது. அது இலங்கை இரண்டாக உடைவதில் முடியும்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading