Local

ஈஸ்டர் குண்டு தாக்குதல் – விசாரணைகளுக்கு உதவும் 8 நாடுகளின் புலனாய்வாளர்கள்

எவ்பிஐ உள்ளிட்ட எட்டு நாடுகளைச் சேர்ந்த புலனாய்வாளர்கள் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவி வருகின்றனர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, தீவிரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு இயல்பு நிலை மீளக் கொண்டு வரப்படும்.

தேர்தல்களைப் பிற்போட முடியாது. எனவே, தேர்தல்களுக்கு முன்னதாக, உறுதியான நிலையை நான் ஏற்படுத்துவேன். தீவிரவாதத்தை இல்லாமல் ஒழிப்பேன்.

தீவிரவாத அமைப்புகளின் செயற்பாட்டு நிலையில் உள்ள உறுப்பினர்களை நாம் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளோம். அவர்கள் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய இன்னும் 25 தொடக்கம் 30 வரையான செயற்பாட்டு நிலை உறுப்பினர்களே வெளியில் உள்ளனர். ஆனால் அவர்கள் தற்கொலைக் குண்டுதாரிகளா என்பது உறுதியாகவில்லை.

இந்த தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்பு தொடர்புபட்டுள்ளது என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. குண்டுவெடிப்புகளுக்கு அந்த அமைப்பு உரிமை கோரியிருக்கிறது.

அமெரிக்காவின் எவ்பிஐ மற்றும் அனைத்துலக காவல்துறை உள்ளிட்ட எட்டு நாடுகளைச் சேர்ந்த புலனாய்வாளர்கள் சிறிலங்காவின் விசாரணைகளுக்கு உதவி வருகின்றனர்.

இது சிறிலங்காவுக்கு மாத்திரமான பிரச்சினை அல்ல. இது ஒரு பூகோள தீவிரவாத அமைப்பு.

அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, ஜேர்மனி, இந்தியா, அவுஸ்ரேலியா போன்ற முன்னேறிய நாடுகளால் கூட, ஐஎஸ் அமைப்பின் தீவிரவாதத்தை முற்றிலுமாக அழிக்க முடியாதுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பற்றி முன்னரே அறிந்திருந்தால், பொருத்தமான நடவடிக்கையை எடுத்திருப்பேன். வெளிநாட்டுக்கு சென்றிருக்கமாட்டேன்.

இந்த தாக்குதல் நாட்டின் பொருளாதாரத்துக்கு பேரிடியாகும். சுற்றுலாத்துறையை பெரிதும் பாதித்துள்ளது.

பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு, சுற்றுலாத்துறை மீண்டும் தாக்குதல்களுக்கு முன்னர் இருந்தது போன்ற நிலைக்குத் திரும்ப வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading