LocalNorth

மின் கம்பம் முறிந்து வீழ்ந்து மின்சார சபை ஊழியர் பலி! – வடமராட்சியில் துயரச் சம்பவம்

விபத்தில் முறிந்த மின் கம்பத்தைச் சீரமைக்கச் சென்ற மின்சார சபை ஊழியர் ஒருவர், அந்த மின் கம்பம் முறிந்து வீழ்ந்ததில் உயிரிழந்த பரிதாப சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது.

கரணவாய் தெற்கு வீரப்பிராய் பகுதியில் நேற்று மாலை இந்தச்சம்பவம் இடம்பெற்றது.

துன்னாலை வடக்கு, வல்லியானந்தம் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவபாதசுந்தரம் சிவசோமக்குமார் (வயது – 51) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தார்.

கரணவாய் வீரப்பிராய் பகுதியில் உள்ள வீதி வழியாக டிப்பர் வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் எதிர் எதிர்த் திசையில் வந்துள்ளன.

வளைவு ஒன்றில் திரும்பும்போது, வீதியோரமாக நடப்பட்டிருந்த மின்சார, தொலைபேசி கம்பத்தில் டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கம்பங்கள் முறிந்து டிப்பரின் மீது சாய்ந்த வண்ணம் இருந்தன.

இது தொடர்பில் மின்சார சபை மற்றும் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் என்பவற்றுக்கு நெல்லியடி பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, மின் கம்பத்தை அகற்றப் பணியாளர்கள் அங்கு அனுப்பப்பட்டனர்.

மின் கம்பத்தை அகற்ற முற்பட்ட சமயத்தில், விபத்துக்குள்ளான டிப்பரைச் சாரதி இயக்கினார்.

இதன்போது லொறியில் சாய்ந்திருந்த மின் கம்பம் மின்சார சபை ஊழியரின் தலை மீது விழுந்தது.

இதனால் மின்சார சபை ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மின்சார சபை ஊழியர்கள் தகுந்த பாதுகாப்பு அங்கிகள் எவற்றையும் அணிந்திருக்கவில்லை எனவும், முன்னெச்சரிக்கையாக இல்லாது கம்பத்தை அகற்றி மின் விநியோகத்தைச் சீர்செய்வதற்காகத் தயார் நிலையில் இருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது எனச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading