Local

வடக்கின் நீர் பிரச்சினைக்கு விரைவான தீர்வு வேண்டும்! – ஜனாதிபதி வலியுறுத்து

வடக்கு மக்களின் வறுமை நிலைக்கான பிரதான காரணியாகக் காணப்படும் நீர் பிரச்சினைக்கு துரித தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்திற்காக முன்மொழியப்பட்டுள்ள நீர் வழங்கல் செயற்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு பற்றிய கலந்துரையாடல் இன்று (12) நண்பகல் நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“விவசாயத்தை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட இப்பிரதேச மக்களுக்கு அவர்களது விவசாயத்திற்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகள் உரியவாறு பெற்றுக்கொடுக்கப்படின் வடக்கு மாகாணத்தில் நிலவும் ஏனைய அபிவிருத்திப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

சுற்றாடல் பாதிப்புகளின்றி நடைமுறைப்படுத்தப்படும் இந்தச் செயற்திட்டத்தினூடாக துரித மற்றும் வெற்றிகரமான பெறுபேறுகளை வடக்கு மக்கள் பெற்றுக்கொள்வார்கள்” – என்றார்.

வடக்கு மாகாண நீர்ப்பாசன மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய நீர் வழங்கல் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

முன்மொழியப்பட்டுள்ள வடமத்திய பாரிய கால்வாய்த்திட்டம், நெதர்லாந்து அரசின் நிதியுதவியில் 2020ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்மொழியப்பட்டுள்ள ‘யாழ்ப்பாணத்திற்கு நீர்’ செயற்திட்டம் ஆகியன தொடர்பாகவும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் ஜயிக்கா நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் ‘எல்லங்கா’ குளக் கட்டமைப்பு அபிவிருத்தி செயற்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மகாவலி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும மற்றும் அந்த அமைச்சின் செயலாளர் அநுர திஸாநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading