Lead NewsLocal

உத்தியோகபூர்வ பேச்சுக்கு தமிழ்க் கூட்டமைப்புத்தான் இன்னமும் நேரம் தரவில்லை! – கோட்டா கூறுகின்றார்

“தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தக் கட்சிகளுடனும் பேச்சு நடத்தத் தயார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் உத்தியோகபூர்வ பேச்சு நடத்த அனுமதி கோரியிருந்தேன். அவர்கள்தான் இன்னமும் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தரவில்லை.”

– இவ்வாறு முன்னாள் பாதுகாப்புச் செயலரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 5 கட்சிகளும் இணைந்து பொது ஆவணம் தயாரிப்பதற்கு முன்னரே, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் பேச்சுக்களை ஆரம்பித்திருந்தது. அந்தப் பேச்சுக்கள் தொடரும் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்த நிலையில், கூட்டமைப்புடனான பேச்சுத் தொடர்பில் கோட்டாபயவிடம் சர்வதேச ஊடகம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நான் தமிழ்க் கட்சிகளின் கோரிக்கையைத்தான் அடியோடு நிராகரிக்கின்றேன். அதற்காக தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்தத் தயாரில்லை என்று ஒருபோதும் சொல்லவில்லை. கூட்டமைப்புடன் தனிப்பட்ட ரீதியில் பேச்சு நடத்தியிருந்தேன். எனினும், கூட்டமைப்பினருடன் உத்தியோகபூர்வ பேச்சு நடத்த அனுமதி கோரியிருந்தேன். அவர்கள்தான் இன்னமும் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தரவில்லை. அவர்கள் நேரம் ஒதுக்கித் தந்தால் எந்தவேளையிலும் சந்திப்பதற்குத் தயாராக இருக்கின்றேன். தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்கு அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தக் கட்சிகளுடனும் பேச்சு நடத்தத் தயாராக இருக்கின்றோம்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading