Lead NewsLocalWorld

முடியட்டும் பிஞ்சு சாவுகள்! வானம் பார்க்கும் தொழில்நுட்பமே குனிந்து பாதாளம் பார்!! – வைரமுத்து இரங்கல்

 

இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சுச் சாவுகள் எனப் பச்சிளம் பாலகன் சுர்த் மரணத்துக்கு கவிஞர் வைரமுத்து தன்னுடைய இரங்கல் கவிதையால் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி 80 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. ஆனால், மீட்புப் பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்தன. குழந்தை இருந்த ஆழ்துளைக் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து மருத்துவர்கள் சோதனை செய்தனர். பின்னர் சுர்ஜித்தின் உடல் அதிக அளவில் சிதைந்துவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியிருந்த சுர்ஜித்தின் உடலை மீட்டு வெளியே எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு சுர்ஜித்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்தநிலையில், சுர்ஜித் மரணத்துக்கு கவிஞர் வைரமுத்து தன்னுடைய இரங்கல் கவிதையால் அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

“அதோ ஒருத்தியின் கண்ணில் உலகத்தின் கண்ணீர். வந்த மழையும் இனி எந்த மழையும் அந்தத் தாயின் கண்ணீர் கறையை கழுவ இயலுமா… அடேய் சுர்ஜித் இத்தனை பேர் அழுத கண்ணீரில் நீ மிதந்து மிதந்து மேலே எழும்பி இருக்கலாம். ஆனால், அழுத கண்ணீரெல்லாம் உன்னை அழுக வைத்து விட்டதே.

உன்னை மீட்க கையில் கயிறு கட்டிப் பார்த்தோம். ஆனால், உன் கால் விரலில் கயிறு கட்டி விட்டதே மரணம். எவன் அவன் பின் கூட்டி பிறந்த குழந்தைக்கு, முன் கூட்டியே சவக்குழி வெட்டியவன். உலகத்தின் நீளமான சவக்குழி இதுதானோ என்னவோ. நடக்க கூடாதது நடந்தேறி விட்டது.

மரணத்தில் பாடம் படிப்பது மடமை சமூகம். மரணத்திலும் கல்லாதது அடிமை சமூகம். ஏய் மடமை சமூகமே வாழ்வின் பக்கவிளைவு மரணமெனில் மரணத்தின் பக்கவிளைவு ஞானம் தானே. அந்தச் சவக்குழிக்குள் மண் விழுவதற்குள் அத்தனை அபாய குழிகளையும் மூடிவிடு. அந்த மெழுகுவர்த்தி அணைவதற்குள் அத்தனை கண்ணீரையும் துடைத்து விடு.

ஏய் வானம் பார்க்கும் தொழில்நுட்பமே. சற்றே குனிந்து பாதாளம் பார். இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சுச் சாவுகள். யாரும் எழுந்து கொள்ள வேண்டாம். ஜன கன மன” – என்று கூறியுள்ளார்.

நடிகர் விவேக் ‘ருவிட்டர்’ பக்கத்தில், “கிட்டத்தட்ட 4 நாட்களாக உணவு உறக்கம் மறந்து ஓய்வின்றி உழைத்துக் களைத்து ஓய்ந்து போய் நிற்கும் நல்லுள்ளங்களுக்கு… சுர்ஜித் உடலை எடுத்துவிட்டோம். இப்போது துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம். எங்களை யார் எடுப்பது?” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading