Local

முடிந்தால் அரசியல் கைதிகளை இன்றே விடுதலை செய்யுங்கள்! – நாமலுக்குச் சுமந்திரன் சவால்

“அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு ஆலோசிக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தனது டுவிட்டரிலே கூறியிருக்கின்றார். அப்படிச் சொல்லிவிட்டால் நாங்கள் என்ன குத்துக்கரணம் அடித்து உங்கள் பக்கம் வருவோம் என நினைக்கிறீர்களா? விடுவிப்பதாக இருந்தால் விடுவியுங்கள். இன்றே விடுவியுங்கள்.”

– இவ்வாறு பகிரங்கச் சவால் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன்.

தமிழரசுக் கட்சியின் வவுனியா இளைஞர் மாநாடு நேற்று வவுனியாவில் நடைபெற்றுறது. அந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிறுபிள்ளையான நாமல் ராஜபக்ஷ சிறுபிள்ளைத்தனமாக இன்று (நேற்று) காலையில் ருவிட்டரில் பதிவொன்று இட்டிருக்கின்றார். அதில், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு ஆலோசிக்கின்றனர் என்று அவர் சொல்லியிருக்கின்றார். கடந்த மூன்று வருடங்களாக எங்களோடு இணைந்து ஆலோசிக்கிறார்கள். அவ்வாறு சொல்லிவிட்டால் நாம் குத்துக்கரணம் அடித்துக் கொண்டு தங்கள் பக்கம் வருவோம் என்று நினைக்கின்றார்களா?

விடுவிப்பதாக இருந்தால் விடுவியுங்கள். இன்றே விடுவியுங்கள். அதற்கு என்ன ஆலோசனை. அது சரியானதும் நியாயமானதுமாகும். அவர்கள் ஒரு கணமேனும் வைத்திருக்கக்கூடாது. நேற்றைய தினம் (நேற்றுமுன்னம்) எங்கள் அறிக்கை வந்ததன் பின்னர் ஓடோடி கொடுக்கின்ற அறிக்கைகள் இவை.

எங்கள் எதிர்ப்பை காட்டுவதனால் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்களாக இருந்தால் நாம் இன்னும் எதிர்ப்பைக் காட்டுவோம். அவ்வாறு எதிர்ப்பைக் காட்டி அவர்களை வெளியே கொண்டு வருவோம். எங்கள் அறிக்கை வெளிவரும் வரை இதனைச் சொல்லவில்லை. வந்தவுடன் அதனைச் சொல்லுகின்றார்கள்.

அவ்வாறான சில்லறை வியாபாரம் எங்களோடு செய்கின்றார்கள். அவர்கள் எங்களோடு தான் சில்லறை வியாபாரம் செய்கிறார்கள். மற்றவர்களெல்லாம் ரொக்கப்பண வேலைதான் செய்வார்கள்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading