கேவலமான செயலைப் புரிந்த வியாழேந்திரன் எம்.பியின் உறுப்புரிமை நீக்கப்படும்! – சம்பந்தன் அறிவிப்பு
மைத்திரி – மஹிந்த பக்கம் தாவி பிரதி அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்ட எஸ்.வியாழேந்திரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரி சிறிசேன – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசில் கிழக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக வியாழேந்திரன் நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவார்கள் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், எமது கட்சியின் உறுப்பினரே மாறியுள்ளமை கேவலமான ஒரு செயல்.
வியாழேந்திரன் மீது ஏற்கனவே சந்தேகங்கள் இருந்தன. எனவே, அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுப்போம். அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கும் நாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்போம்” – என்றார்.
