LocalSports

இறுதிவரைப் போராடிய இந்தியாவுக்குத் தோல்வி! – இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து

இந்திய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி நேற்று மழையின் காரணமாக பாதிக்கப்பட்டு இன்று தொடர்ந்து நடைபெற்றது.

தொடர்ந்து துடுப்பாட்டம் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 239 ஓட்டங்கள் எடுத்தது.

எளிமையான இலக்கை வென்றுவிடலாம் என்ற கனவோடு துடுப்பாட்டத்தைத் தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தது நியூசிலாந்து அணி.

ஆட்டத்தின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது ஓவர்களில் ரோகித் சர்மா (1), விராட் கோலி (1), லோகேஷ் ராகுல் (1) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 6 ஓட்டங்கள் எடுத்து 10ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். முதல் 10 ஓவர்களிலேயே முக்கியமான 4 விக்கெட்டுக்களை இழந்து இந்திய அணி வெறும் 24 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பண்ட் மற்றும் ஹார்டிக் ஆகியோரும் விக்கெட்டுக்களை இழந்து வெளியேறினர். இதனால் இந்திய இரசிகர்கள் நம்பிக்கையை இழந்து மிகுந்த வருத்தத்தில் இருந்த நிலையில் அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் டோனியும், ஜடேஜாவும் இந்திய இரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி மீண்டும் நம்பிக்கையைக் கொடுத்தனர்.

ஒரு கட்டத்தில் 92 ஓட்டங்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை டோனி – ஜடேஜா ஜோடி 7ஆவது விக்கெட்டுக்கு 106 ஓட்டங்களை இணைப்பாட்டமாக எடுத்து மீட்டது.

இறுதியில் வெற்றிக்காகப் போராடிய ரவீந்திர ஜடேஜா 77 ஓட்டங்களும், டோனி 50 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

240 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு விளையாடிய இந்திய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 221 ஓட்டங்களை மட்டும் எடுத்தது.

முடிவில் இந்தியாவை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர் இரண்டாவது முறையாக அரையிறுதிப் போட்டியில் இந்தியா அணி தோல்வி அடைந்தது. இரண்டாவது முறையாக உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading