சர்வதேச தமிழ் இதழியல் மாநாடு யாழில் நாளை ஆரம்பம்! – பேராசிரியர்கள், துறைசார் வல்லுநர்கள் பங்கேற்பு
நான்காவது சர்வதேச தமிழ் இதழியல் மாநாடு யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மக்கள் இதழியல் அமைப்பின் ஏற்பாட்டில் இரு நாட்களாக அமர்வு நடைபெறவுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழக ஊடகத்துறை மற்றும் தொடர்பாடல் பிரிவு தலைவர் பேராசிரியர் கோபாலன் ரவீந்திரன் தலைமையில் நடைபெறும் ஆரம்ப நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமை விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் மதிப்புறு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.
நாளை காலை 8.30 மணிக்கு பதிவுகளுடன் நிகழ்வு ஆரம்பமாகும். காலை 9.10 மணிக்கு தமிழ்நாடு பாரம்பரிய நடனத்துடன் மங்கள விளக்கேற்றல் நடைபெறும்.
‘உதயன்’ பத்திரிகையின் ஆசிரியர் தே.பிரேமானந்த் வரவேற்புரை நிகழ்த்தவுள்ளார். காலை 9.40 மணிக்கு, மக்கள் இதழியல் இயக்கத்தின் தலைவர் தே.தேவானந்த் தொடக்கவுரை நிகழ்த்தவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஆசியுரைகளை, சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு திருமுருகன், ‘பாதுகாவலன்’ பத்திரிகையின் ஆசிரியர் அருட்தந்தை ஏன்சிலி றொசான், ‘தினகரன்’ பத்திரிகையின் ஆசிரியர் கே.குணராசா, யாழ். எவ்.எம். கட்டுப்பாட்டாளர் முருகேசு ரவீந்திரன் ஆகியோர் வழங்கவுள்ளனர்.
தலைமையுரை காலை 10.15 மணிக்கு நடைபெறும். அதனை சென்னைப் பல்கலைக்கழக ஊடகத்துறை மற்றும் தொடர்பாடல் பிரிவுத் தலைவர் பேராசிரியர் கோபாலன் ரவீந்திரன் நிகழ்த்துவார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் மதிப்புறு விருந்தினர் உரையை நிகழ்த்துவார்.
அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் உரையாற்றுவார்.
முதன்மைப் பேச்சாளர் உரையை புதுடில்லியைச் சேர்ந்த பேராசிரியர் விஸ்வஜித்தாஸ் நிகழ்த்துவார்.
மக்கள் இதழியல் இயக்கத்தைச் சேர்ந்த கிருத்திகா தர்மராஜ் நன்றியுரையாற்றுவார். ஆரம்ப அமர்வு காலை 11.15 மணிக்கு நிறைவுக்கு வரும்.
இரண்டாவது அமர்வு காலை 11.30 மணிக்கு ஆரம்பமாகும். தமிழ் ஊடகத்துறையின் வரலாறு தொடர்பில் கலாநிதி கலாவாதி அமர்வு நடத்துவார். மதியம் 12.30 மணிக்கு தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சி தொடர்பில் கலாநிதி சக்திவேல் அமர்வு நடத்துவார்.
ஊடகக் கல்வி தொடர்பில் தே.தேவானந்த் பி.ப. 2.15 மணிக்கு மூன்றாவது அமர்வை நடத்துவார். மக்கள் இதழியல் தொடர்பான குழுக் கலந்துரையாடலை பேராசிரியர் ஜி.ரவீந்திரன் நடத்துவார்.
மாலை 4.30 மணிக்கு முற்றம் கலைக்குழு தமிழ்நாட்டு பாரம்பரிய நடனத்தையும், செயற்திறன் அரங்க இயக்கம் எங்கதம் நாடக ஆற்றுகையை நிகழ்த்துவார்கள். மாலை 6 மணிக்கு முதல் நாள் அமர்வு நிறைவுக்கு வரும்.

