சர்வதேச பயங்கரவாதம் அடியோடு ஒழிக்கப்படும்! – மைத்திரி நம்பிக்கை; இராணுவத்தையும் புகழ்ந்து தள்ளினார்
“இராணுவத்தினரின் சிறப்பும் அர்ப்பணிப்பும் உயிர்த் தியாகமுமே அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தாய்நாட்டைப் பாதுகாத்துள்ளது. இன்று நாடு முகங்கொடுத்திருக்கும் சர்வதேச பயங்கரவாத சவாலை இலங்கையிலிருந்து முற்றாக ஒழித்து நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்குரிய ஆற்றல் எமது இராணுவத்தினரிடம் காணப்படுகின்றது. இதை முப்படைகளின் தலைவர் என்ற வகையில் நான் உறுதியாக நம்புகின்றேன்.”
– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இராணுவத்தினரின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் பத்தாண்டுப் பூர்த்தியை முன்னிட்டு இன்று (19) பிற்பகல் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
போரில் உயிரிழந்த, காணாமல்போன மற்றும் அங்கவீனமுற்ற இராணுவத்தினரை நினைவுகூர்ந்து ஸ்ரீ ஜயவர்தனபுர நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியின் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய இராணுவ நினைவுத் தூபி முன்னிலையில் நினைவு தினக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றும்போது மேலும் தெரிவிக்கையில்,
“முப்பது வருடகால கொடிய பயங்கரவாதத்துக்கு எதிரான போர் வெற்றியை அடைந்து பத்து வருடங்கள் நிறைவுபெறும் இந்தச் சந்தர்ப்பத்தில், அதற்கு முற்றிலும் வேறுபட்ட சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிர்பாராத வகையில் முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.
இதன் காரணமாக இந்நாட்டு முப்படையினர், புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புத்துறை நிபுணர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் புதியதொரு பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த முப்பது ஆண்டு கால போர் அனுபவங்களைப் பயன்படுத்தி புதிய பயங்கரவாத சவாலை நிச்சயமாக வெற்றிக்கொள்வதற்கான ஆற்றல் அனைவருக்கும் உள்ளது.
அதேவேளை, முப்பது வருடகால கொடிய பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உயிர்த்தியாகம் செய்த, காணாமல்போன, அங்கவீனமுற்ற இராணுவத்தினருக்கு எனது கௌரவத்தைத் தெரிவிக்கின்றேன். அவர்கள், அவர்களின் பெற்றோர்கள், மனைவிமார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு எனது நன்றியைக் கூறுகின்றேன்.
அத்தோடு, தற்போது கடமையில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினரால் தாய்நாட்டுக்காக ஆற்றும் சிறப்பான சேவையையும் நான் பாராட்டுகின்றேன்.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஏற்பட்ட சர்வதேச பயங்கரவாதத் தாக்குதலினால் உயிரிழந்தவர்களையும் இந்நேரத்தில் நினைவுகூருகின்றேன். அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றேன்” – என்றார்.
மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு செயலாளர் நாயகம் சாந்த கோட்டேகொட, பாதுகாப்பு பதவிநிலை பிரதானி மற்றும் முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள், தேசிய ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் ஜன்மிக்க லியனகே மற்றும் போரில் உயிரிழந்த, காணாமல்போன மற்றும் அங்கவீனமுற்ற இராணுவத்தினரின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.







