Local

பிரபாகரனுக்கும் அஞ்சாத ‘இரும்புப் பெண்’ சார்ள்ஸ்! – மங்கள புகழாரம்

பிரபாகரனுக்கும் அஞ்சாத இரும்புப் பெண் என்று சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பி.எம்.எஸ் சார்ள்ஸை வர்ணித்துள்ள நிதி அமைச்சர் மங்கள சமரவீர, அவர் மீது தமக்கு முழு நம்பிக்கை இருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.

சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பதவியில் இருந்து பி.எம்.எஸ்.சார்ள்ஸை நீக்கி விட்டு, முன்னாள் கடற்படை அதிகாரியை அந்தப் பதவியில் நியமிக்க அமைச்சரவை கடந்த மாதம் முடிவு செய்தது.

இதற்கு எதிராக, சுங்கத் திணைக்கள அதிகாரிகள் பணிப் புறக்கணிப்பு மற்றும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இதனால், சுமார் 10,000 கொள்கலன்கள் சோதனையிடப்படாமல் முடங்கிக் கிடந்ததுடன், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானமும் பாதிக்கப்பட்டது.

இந்தநிலையில், மீண்டும் சுங்கத் திணைக்களப் பணிப்பாளராக, பிஎம்.எஸ்.சார்ள்ஸை நியமிக்க நிதி அமைச்சர் மங்கள சமரவீர நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார்.

இந்தநிலையில் நேற்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர, சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பி.எம்.எஸ்.சார்ள்ஸுடன் இணைந்து கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

இங்கு கருத்து வெளியிட்ட நிதி அமைச்சர் மங்கள சமரவீர,

“துறைமுகத்தில் இயங்கும் வணிக மாபியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் ஆற்றல், சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பிஎம்.எஸ். சார்ள்ஸுக்கு உள்ளது என்று நாம் முழுமையாக நம்புகின்றோம். அதற்காகப் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும்.

பி.எம்.எஸ். சார்ள்சை ‘இரும்புப் பெண்’ என்று வர்ணித்த அவர், ஆனாலும், பிரபாகரனை அச்சமின்றி எதிர்கொண்ட அவருக்கு துறைமுக அதிகார சபை மாபியா சவாலாக இருந்தது.

அதனால் தான், அவரை நிதி அமைச்சுக்குள் எடுத்துக் கொண்டு, முன்னாள் கடற்படை அதிகாரியை சுங்கப்பணிப்பாளர் பதவிக்கு நியமிக்க முடிவு செய்தோம்.

கொழும்பு சுங்கத்துக்குள் அதிகாரம் செலுத்தும் வணிக மாபியாவை கட்டுப்படுத்தவே முன்னாள் கடற்படை அதிகாரியை நியமிக்க முடிவு செய்தோம்.

முன்னாள் இராணுவ அதிகாரிகள் பலர் சிவில் பதவிகளையும், இராஜதந்திரப் பதவிகளிலும் இருக்கின்றார்கள்.

இந்த மாபியாவினால், மிளகு மற்றும் பாக்கு ஏற்றுமதியினால் சுங்கத் திணைக்களத்துக்கு கிடைக்க வேண்டிய பெருமளவு வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு சுங்கப் பணிப்பாளர் பொறுப்பாக முடியாது.

2018இல் சுங்கத் திணைக்களம், 1.068 ட்ரில்லியன் ரூபா வருமான இலக்கை நிர்ணயித்திருந்த போதும், 87 வீத வருமானத்தை, 921 பில்லியன் ரூபாவை மாத்திரமே வருமானமாகப் பெற்றது.

2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இறக்குமதி 8.3 வீதத்தினால் அதிகரித்துள்ளபோதும், சுங்க வருமானம், 1.4 வீதம் மட்டுமே அதிகரித்திருக்கின்றது” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading