EastLocal

கிழக்கில் கபாலி குழு! – அடக்கக் கோருகிறார் சிறிநேசன் எம்.பி.

வீடுகளை உடைத்து கொள்ளையிடுதல், மதுபோதையில் பெண்களிடம் சேஷ்டை செய்தல், வீதிகளில் செல்வோரை மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு துன்புறுத்தல்கள் மற்றும் குற்றச்செயல்களில் கபாலி குழு ஈடுபட்டுள்ளதாகவும், அந்தக் குழுவுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கேட்டுள்ளார்.

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவிலங்குதுறைப் பகுதியிலேயே இந்தக் குழுவின் அட்டகாசம் அதிகரித்துள்ளது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“ஆள்களை மிரட்டுதல் உள்ளிட்ட மக்களைத் தீண்டுகின்ற பல்வேறான அட்டகாசங்களைக் கபாலி என்பவரும் அவரது குழுவினருமே மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் காத்தான்குடிப் பொலிஸாரால் சிலர் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகின்றனர். எனினும், அவ்வாறு அழைத்துச் செல்லப்படுபவர்கள் சில நாட்களில் மீண்டும் திரும்பி வந்து விடுகின்றனர் என பொது அமைப்புகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொலிஸாரால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையிலேயே இந்தக் குழுவினரின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது.

இந்த விவகாரம் தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுடன், மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்படும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading