Lead NewsLocal

ஐ.தே.கவை பணயக்கைதியாக வைத்திருக்கிறது கூட்டமைப்பு! – பதவி இழந்த மஹிந்த கடும் சீற்றம்

நாடாளுமன்றத்தில் 103 ஆசனங்களைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியை, 14 ஆசனங்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பணயக் கைதியாகப் பிடித்து வைத்திருக்கிறது என்று கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி.

50 நாட்கள் பிரதமராகப் பதவியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷ, இன்று அப்பதவியில் இருந்து விலகிய பின்னர், நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என, 117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதில், 14 வாக்குகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடையவை.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருந்தாலும், அதேநாள், நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்று வாக்களித்தாலும், தாங்கள் அரசில் சேரப் போவதில்லை எனவும், எதிர்க்கட்சியிலேயே இருப்போம் என்றும் கூறியிருந்தார்.

எனவே, இங்கு உண்மையில் என்ன நடந்தது என்றால், 103 ஆசனங்களைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியை கூட்டமைப்பு பணயக் கைதியாக வைத்துள்ளது.

கூட்டமைப்பின் கருத்துக்களுக்கு இணங்கவில்லை என்றால், ஐக்கிய தேசியக் கட்சி எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கக்கூடும்.

நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்தும் கருவியை (றிமோட் கொன்ரோல்) கூட்டமைப்பே இப்போது வைத்திருக்கின்றது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading