Local

நாம் அதிகாரத்தில் இருக்கும்போதெல்லாம் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாத்தோம்! – மஹிந்த கூறுகின்றார்

“நாம் அதிகாரத்தில் இருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் தகவல் அறியும் உரிமையையும், ஊடக சுதந்திரத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.”

– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தையொட்டி இன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவா் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-

“சர்வதேச ஊடக சுதந்திர தினமான இன்று மக்களின் தகவல் அறியும் உரிமையை உறுதிசெய்வதற்காக இரவு பகலாக அயராது உழைக்கும் அனைத்து ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

தகவல் தொடர்பு தற்போது உலகில் மிக வேகமாக முன்னேறிவரும் துறைகளில் ஒன்றாக மாறியுள்ளது. கடந்த சில தசாப்தங்களில் பல்வேறு ஊடகங்களின் ஊடாக தகவல்கள் பொதுமக்களை சென்றடையும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது.

எனினும், சுயாதீனமான மற்றும் பொறுப்பான ஊடக பாவனையே காலத்தின் தேவையாகும். முறையான ஊடக பயன்பாட்டின் மூலமே மக்களின் தகவல் அறியும் உரிமை பாதுகாக்கப்படுகின்றது. அதற்காகப் பணியாற்றுவது அனைவரதும் பொறுப்பும், கடமையுமாகும் என நான் நம்புகின்றேன்.

இந்த நாட்டின் ஊடக சுதந்திரம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட விசித்திரமான காலங்களை நாம் நினைவுபடுத்தத் தேவையில்லை. நாம் அதிகாரத்தில் இருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் தகவல் அறியும் உரிமையையும், ஊடக சுதந்திரத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகின்றேன்.

முழு உலகமும் கொரோனாத் தொற்று நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில் ‘தகவல்கள் பொதுமக்களின் நலனுக்கானது’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச ஊடக சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது காலத்துக்கு உகந்ததாகும்.

நாடு என்ற ரீதியில் இந்தத் தொற்றுநோயை எதிர்கொண்டு, அதனை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் பொதுமக்களைத் தெளிவுபடுத்தி, உயிராபத்தையும் பொருட்படுத்தாது ஊடகவியலாளர்கள் நிறைவேற்றும் இந்த உன்னத செயற்பாட்டையும், அர்ப்பணிப்பையும் அரசு எப்போதும் பாராட்டும்.

அறிவை ஆயுதமாகக் கொண்ட ஊடகவியலாளர்களின் தொழில் வளர்ச்சிக்காககே கல்வி புலமைப்பரிசில்கள் மற்றும் ஊடக உபகரணங்களை வழங்குவதற்கான எமது நடவடிக்கை எதிர்காலத்திலும் செயற்படுத்தப்படும்.

துல்லியமான செய்திகளை அறிந்துகொள்வதற்கான மக்களின் உரிமையை பாதுகாத்து, நாட்டின் ஒட்டுமொத்த சமூக, கலாசார மற்றும் பொருளாதார அபிலாஷைகளை அடைவதற்கு ஊடக சுதந்திரத்தை பயன்படுத்துமாறு அனைத்து ஊடகவியலாளர்களிடமும் கேட்டுக்கொள்கின்றேன்” – என்றுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading