Local

இன்று அமைச்சுப் பதவியை ஏற்பர் முஸ்லிம் எம்.பிக்கள்! – ரிஷாத், ஹக்கீமுக்கும் பழைய பதவிகள்

அமைச்சுப் பதவிகளை இராஜிநாமா செய்த 9 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அமைச்சுப் பதவிகளை இதுவரையில் ஏற்காது எஞ்சியுள்ள 7 பேரும் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் மீண்டும் அமைச்சர்களாகச் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசீம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் ஏற்கனவே அமைச்சுப் பதவிகளை ஏற்றனர். இந்தநிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், பைசல் காசீம், எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் செய்யித் அலி சாஹிர் மௌலானா ஆகியோரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன், எம். எஸ். எஸ். அமீர் அலி மற்றும் அப்துல்லா மஹ்ரூப் ஆகியோர் இன்று மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கவுள்ளனர். ஏற்கனவே வகித்த பதவிகளே இவர்களுக்கு மீண்டும் வழங்கப்படவுள்ளன எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜிநாமா செய்த சகல முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மீண்டும் சம்பந்தப்பட்ட அதே அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமரின் இந்தக் கோரிக்கை ஜனாதிபதிக்குப் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் கடந்த 23ஆம் திகதி எழுத்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading