Lead NewsLocal

புதிய அமைச்சரவை நியமிப்பு: கோட்டாவின் நடவடிக்கை அரசமைப்புக்கு முரணானது! – சாடுகின்றார் சுமந்திரன் எம்.பி.

“பாதுகாப்பு அமைச்சு, சட்டம் – ஒழுங்கு அமைச்சு ஆகியவற்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்வசம் வைத்துக்கொள்ள முயற்சிப்பாராயின் அவரது நடவடிக்கை அரசமைப்புக்கு முரணானது. சட்டவிரோதமான செயற்பாடு.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்றுப் பொறுப்பேற்றுக் கொண்டது. 16 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டம் – ஒழுங்கு அமைச்சு ஆகியன எவருக்கும் வழங்கப்படவில்லை. இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனிடம் கேட்டபோது,

“19ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுபவர் தன் வசம் அமைச்சுப் பொறுப்புக்களை வைத்திருக்க முடியாது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மாத்திரம் அவரது முதலாவது பதவிக் காலத்துக்கு விதிவிலக்காக, பாதுகாப்பு, மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சுக்கள் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டது. இறுதியில் சட்டம் – ஒழுங்கு அமைச்சையும் அவர் தம்வசப்படுத்தி வைத்திருந்தார். இனி தெரிவாகும் எந்தவொரு ஜனாதிபதியும் அமைச்சுப் பொறுப்புக்களை வைத்திருக்க முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்த அமைச்சுப் பொறுப்புக்களை வழங்க வேண்டும். நேற்றுமுன்தினம் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட 16 பேரில் இருவருக்கு மகாவலி அபிவிருத்தி அமைச்சும் (சமல் ராஜபக்ச), சுற்றாடல் அமைச்சும் (எஸ்.எம்.சந்திரசேன) பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பாதுகாப்பு அமைச்சும், சட்டம் – ஒழுங்கு அமைச்சும் எவருக்கும் வழங்கப்படவில்லை என்பதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சதான் அதனை வைத்திருக்க முயற்சிக்கலாம். அவ்வாறு அவர் செய்வாராயின் அது அரசமைப்புக்கு முரணானது” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading