FeaturesLead NewsLocal

சி.ஐ.டி. பணிப்பாளர் ஷானியின் இடமாற்றம் அரசியல் ரீதியானது! – கூட்டமைப்பு கடும் குற்றச்சாட்டு; ஐ.தே.க. ஏன் மௌனம் என்றும் கேள்வி

“வசீம் தாஜுதீன், லசந்த விக்கிரமதுங்க, மாணவர்கள் கடத்தல் உள்ளிட்ட மிக முக்கியமான வழக்குகளை விசாரித்த, குற்றப் புலனாய்வுப் பணிப்பாளர் ஷானி அபயசேகரவின் இடமாற்றம் அரசியல் ரீதியானது” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

கடற்படையினருடன் தொடர்புடைய மாணவர்கள் கடத்தல், லசந்த விக்கிரமதுங்க கொலை, வசீம் தாஜுதீன் கொலை, மருத்துவர் சாபிக்கு எதிராக சுமத்தப்பட்ட கருக்கலைப்பு குற்றச்சாட்டு வழக்கு, உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்ட வழக்கு, கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை நெறிப்படுத்தி நடத்தியவர் குற்றப் புலனாய்வுப் பணிப்பாளர் ஷானி அபயசேகர.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அவருக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

“இது அரசியல் நோக்கம் கொண்ட இடமாற்றம். மனித உரிமை மீறல் தொடர்பான பல உயர்மட்ட வழக்கு விசாரணைகளை ஷானி அபயசேகர நடத்தினார். பதில் பொலிஸ்மா அதிபர் இத்தகைய அரசியல் அழுத்தத்துக்கு ஏன் இடம்கொடுத்தார்? சுயாதீனமான பொலிஸ் ஆணைக்குழு சுதந்திரமாகச் செயற்படவேண்டும். இந்த விடயம் தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஏன் மௌனமாக இருக்கின்றது?” என்று சுமந்திரன் எம்.பி. பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading