Local

வடக்கு – தெற்கு என்ற வேறுபாடு இல்லாமல் உதவிகளைத் துரிதமாக வழங்க வேண்டும்! – ஹெலியிலிருந்து அழிவுகளைப் பார்வையிட்டவாறு அமைச்சர்களிடம் தெரிவித்தார் பிரதமர் ரணில்

“வடக்கு – தெற்கு என்ற வேறுபாடு இல்லாமல் வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வன்னி மக்களுக்கான அனைத்து உதவிகளையும் நாம் விரைவாக வழங்க வேண்டும்.”

– இவ்வாறு பிரதமரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம், மறுவாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி திறன் மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அடைமழையால் வடக்கில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரை நேரில் பார்வையிடவும், பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்காகவும் பிரதமர் ரணில் நேற்று வடக்கு சென்று வந்தார். அவர் ஹெலியில் வடக்குக்குச் செல்லும்போதே வானத்தில் பறந்தவாறு பொது நிர்வாகம், இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே ஆகியோரும் ரணிலுக்கு அருகில் இருந்தனர்.

“வெள்ளத்தால் வடக்கு மாகாண மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தினந்தோறும் வரும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையைப் பார்க்கும்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருக்கின்றது. வடக்கு – தெற்கு என்ற வேறுபாடு இல்லாமல் வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மக்களுக்கான அனைத்து உதவிகளையும் நாம் விரைவாக வழங்க வேண்டும். அவர்களின் குறைநிறைகளை நாம் நேரில் கேட்டறிய வேண்டும்” என்று பிரதமர் ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading