FeaturesLead NewsLocal

தமிழினப் பேரவலத்தின் 10ஆவது நினைவேந்தல்! – முள்ளிவாய்க்காலில் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் அறிவிப்பு

முள்ளிவாய்க்கால் தமிழினப் பேரவலம் இடம்பெற்று 10ஆவது ஆண்டு பூர்த்தியாகின்ற நிலையில் எதிர்வரும் மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இம்முறையும் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதிக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலையில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறுவது தொடர்பாக இதுவரை உறுதியான அறிவித்தல்கள் எவையும் வெளிவராத நிலையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது .

இந்தநிலையில், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நினைவேந்தல் ஏற்பாட்டாளர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஏற்பாடுகள் குறித்து தமிழ் மக்களுக்கு அறிவித்தலை விடுத்துள்ளனர் .

அந்தவகையில், நினைவேந்தல் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ரோங் மற்றும் திருகோணமலை தென்கைலை ஆதீனத்தை சேர்ந்த குருக்கள் அகத்தியர் ஆகியோர் இணைந்து இந்த அறிவித்தலை விடுத்துள்ளனர்.

அவர்கள் விடுத்துள்ள அறிவித்தல் வருமாறு:-

“முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலை இந்தவருடம் பெருந்திரளான மக்களை திரட்டி 10ஆவது ஆண்டில் நீதியைக் கோரி உணர்வுபூர்வமாக நினைவேந்தலைச் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குல்களால் அந்த முயற்சி தடைபட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்த வருடமும் சிறப்பான முறையில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் மே 18ஆம் திகதியன்று முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இடம்பெற ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக மிகவும் அமைதியான முறையில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளைச் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அனைத்துத் தரப்பினரும் இணைந்து இந்த நினைவேந்தலை மேற்கொள்ள வேலைகள் நடைபெற்று வருகின்றன. உணர்வுபூர்வமாக அமைதியான முறையில் இந்த வருடமும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும். அத்தோடு நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.

நினைவேந்தலுக்கு வருபவர்கள் பொதிகள் எவற்றையும் கொண்டுவராது நினைவேந்தல் நிகழ்வுக்கு வரவேண்டும் என்றும், பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் நினைவேந்தலில் கலந்துகொள்ளுமாறும் வேண்டுகோள் விடுகின்றோம்.

அத்தோடு இறுதிப்போர் இடம்பெற்ற 2009இல் முள்ளிவாய்க்காலில் உப்பில்லாத கஞ்சியை அருந்தியே மக்கள் வாழ்ந்தார்கள். எனவே, அதனை நினைவூட்டும் முகமாக உப்பில்லாத முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்கவும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். மேலும், அனைத்துக் கிராமங்களிலும், வீதிகளிலும், ஆலயங்களிலும் மே 18அன்று இதேபோல் முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்க முடியுமானவர்கள் ஏற்பாடுகளை செய்யுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம்” – என்றனர்.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading