Lead NewsLocal

ஒருவரின் விடுதலைக்காக ரிஷாத் 3 தடவைகள் அழைப்பெடுத்தார்! – இராணுவத் தளபதி பரபரப்புத் தகவல்

உயிர்த்த ஞாயிறன்று தீவிரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரின் விடுதலை தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கரிசனை கொண்டிருந்தார் என்று இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்தார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் தெஹிவளையில் கைதுசெய்யப்பட்டபோது, அவரை விடுவிக்கும் முயற்சியிலேயே அமைச்சர் ஈடுபட்டார் என்று இராணுவத் தளபதி கூறினார்.

“குறித்த நபரின் விடுதலைக்காக மூன்று தடவைகள் எனக்கு அழைப்பெடுத்தார் அமைச்சர். அவரை விடுதலை செய்யுமாறு அவர் கோரினார். ஒன்றரை வருடம் கழித்து என்னுடன் பேசுமாறு நான் அப்போது அவரிடம் கூறினேன்” என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பொது எதிரணியினரால் சபாநாயகரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. அதில் அமைச்சருக்கு எதிராக10 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் இராணுவத் தளபதிக்கு அழுத்தம் கொடுத்தமையும் ஒன்றாகும்.

இது தொடர்பான விளக்கம் அளிக்கும் செய்தியாளர் மாநாடு கொழும்பில் இன்று நடைபெற்றது. இதன்போதே இராணுவத் தளபதி இந்தத் தகவலை வெளியிட்டார்.

‘அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உங்களுடன் பேசி ஒருவரை விடுதலை செய்யக் கேட்டார் எனக் கூறியுள்ளீர்கள். அது வேண்டுகோளா? அழுத்தமா?’ என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் வழங்கி இராணுவத் தளபதி மேலும் கூறியதாவது:-

“அது அழுத்தமா, வேண்டுகோளா என்பதைப் பார்த்தால் என்னிடம் விடுத்த வேண்டுகோளாகவே அதனைப் பார்க்கலாம். உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் தெஹிவளையில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரின் விடுதலை சம்பந்தமாகவே அமைச்சர் பேசினார்.

குறித்த நபர் தெஹிவளையில் கைதுசெய்யப்பட்டதையடுத்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மூன்று தடவைகள் என்னுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.

குறித்த சந்தேகநபரின் பெயரைக் குறிப்பிட்டு அவர் தொடர்பில் விசாரித்தார். முதல் தடவை அழைப்பை ஏற்படுத்தியபோது அது பற்றித் தெரியவில்லை, விசாரித்துச் சொல்வதாகச் சொன்னேன். மீண்டும் இரண்டாவது தடவையும் அமைச்சர் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார். அதன்போது பார்த்துச் சொல்வதாகச் சொன்னேன்.

மூன்றாவது முறையும் அமைச்சர் தொடர்பு கொண்டார். அப்படி ஒருவரைக் கைதுசெய்துள்ளோம். அவரை ஒன்றரை வருடங்களுக்கு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சட்டத்தில் எனக்கு அதிகாரம் உள்ளது. எனவே, ஒன்றரை வருடங்களின் பின்னர் என்னைத் தொடர்புகொள்ளுங்கள். அப்போது தகவல் சொல்வதாகச் சொன்னேன்” – என்றார்.

தெஹிவளையில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பான தகவலை வெளியிட இராணுவத் தளபதி மறுத்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading