Local

கட்சி தாவும் படலம் ஆரம்பம்! – பிள்ளையார் சுழிபோட்டார் நாவின்ன

ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் கட்சி தாவும் படலம் ஆரம்பமாகியுள்ளது.

இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. நாவின்ன இன்று பிள்ளையார் சுழி போட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினராகச் செயற்பட்ட எஸ்.பி. நாவின்ன 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மைத்திரியுடன் சங்கமித்தார். அதன்பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி ஆட்சிக் கவிழ்ப்பு சூழ்ச்சியின் பின்னர் மீண்டும் மஹிந்த பக்கம் அவர் ஓடினார். இதனால், அண்மையில் அவரைக் கட்சியிலிருந்து இடைநிறுத்தும் முடிவை ஐக்கிய தேசியக்கட்சி எடுத்திருந்தது.

எனினும், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாஸவுக்கு ஆதரவு வழங்குவதற்காக மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் அவர் இன்று வந்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் சிலரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளனர். அத்துடன், ஐ.தே.கவைவிட்டு வெளியேறிய உறுப்பினர்கள் சிலரும் மீண்டும் தாய்வீடு திரும்பவுள்ளனர்.

இதேபோல், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கவுள்ளனர்.

இதற்கிடையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலரும் கட்சி தாவவுள்ளனர். அவர்களில் ஒருசிலர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடனும், ஏனையோர் ஐக்கிய தேசியக் கட்சியுடனும் இணையவுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading