Lead NewsLocal

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு கோரி கெஞ்சினார் சஜித்! – நழுவினார் சம்பந்தன்

“ஜனாதிபதித் தேர்தலில் நான் வேட்பாளராகக் களமிறங்கும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கட்சியின் ஆதரவு கட்டாயம் தேவை.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், அந்தக் கோரிக்கைக்குப் சாதகமான பதில் எதுவும் வழங்காமல் நழுவியுள்ளார் சம்பந்தன்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நேற்றுமுன்தினம் இரவு சஜித் பிரேமதாஸவுக்கும் இரா.சம்பந்தனுக்கு இடையில் முக்கியமான சந்திப்பு நடைபெற்றது. அமைச்சர் மங்களவும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நான் தயாராக இருக்கின்றேன். என்னை ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகக் களமிறக்குமாறு கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் ஆகியோர் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக நான் நியமனம் பெறாத பட்சத்தில் பொதுவேட்பாளராகப் போட்டியிடுமாறும் எனக்குப் பல தரப்பினராலும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அல்லது பொதுவேட்பாளராக நான் களமிறங்கினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு எனக்குக் கட்டாயம் தேவை. வடக்கு, கிழக்கில் மாபெரும் பிரசாரக் கூட்டங்களை நடத்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அத்துடன், எனது பிரசாரக் கூட்டங்களில் கூட்டமைப்பின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும்” என்று இந்தச் சந்திப்பின்போது இரா.சம்பந்தனிடம் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த இரா.சம்பந்தன், “ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் இது குறித்து இப்போதே அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க முடியாது. தேர்தல் அறிவிப்பு வெளியானாலும் இது தொடர்பில் நான் மட்டும் தனித்து முடிவெடுக்க முடியாது. இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆகியவற்றில் பேசித்தான் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும். அதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களுடனும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தனித்தனியே பேச்சுகளை நடத்தும்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading