கூட்டத்துக்குச் சம்பந்தனுக்கு அழைப்புக் கொடுக்கவில்லை! – ஏற்றுக்கொள்கிறார் மனோ
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற கூட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குத் தான் நேரடியாக அழைப்பு விடுக்கவில்லை என்று தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கன்னியா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு அமைச்சர் மனோ கணேசனால் ஒழுங்குபடுத்தப்பட்டது. கடந்த புதன்கிழமை இரவு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மனோ கணேசனால் அறிவிக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நண்பகல் இடம்பெற்ற சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கவில்லை.
இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எந்தவொரு தரப்பினரும் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை. அதன் காரணமாகவே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை என்று கூறியிருந்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசனிடம் கேட்டபோது,
“நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தெரியப்படுத்தவில்லை. கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு அறிவித்தேன். அதை அந்தக் கட்சியின் உத்தியோகபூர்வ அழைப்பாக எடுத்துக்கொள்வார்கள் என்று நினைத்தேன்” என்று குறிப்பிட்டார்.

