Local

பிரிவினைவாதிகளுக்கெதிராகச் செயற்பட புதிய வருடத்தில் திடசங்கற்பம் பூணுவோம்!

“சமூகங்களை இன, மத அடிப்படையில் பிரிக்கும் குறுகிய அரசியல் எண்ணம் கொண்ட பிரிவினைவாதிகளுக்கெதிராக செயற்பட இந்தப் புதிய வருடத்தில் திடசங்கற்பம் கொள்வோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“மலர்ந்துள்ள இந்தப் புத்தாண்டானது இலங்கை வாழ் மக்களுக்கு செழிப்பானதும் மகிழ்ச்சிகரமானதுமாக அமைய எனது வாழ்த்துக்கள்.

ஒரு புதிய வருடத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் இத்தருணத்தில் இவ்வருடமானது இந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் கொண்டு வருகின்ற ஆண்டாக அமைய நான் பிரார்த்தனை செய்கிறேன்.

கடந்த வருடமானது சாதகமான – பாதகமான நிகழ்வுகளினூடாக பல்வேறு படிப்பினைகளை எமக்கு கொடுத்துள்ளது.

இந்தப் படிப்பினைகளை எமது வாழ்வை வளப்படுத்திக்கொள்ளவதற்குப் பயனாக்கிக் கொள்ளும் அதேவேளை மற்றவர்களின் வாழ்விலும் நன்மையைக் கொண்டு வருமுகமாகவும் பயன்படுத்திக் கொள்வோமாக.

சமூகங்களிடையே பிரிவினையைக் கொண்டுவரும் பாதக காரணிகளுக்கு நாம் அகப்பட்டுப் போகாமல் அதேவேளை, சமூகங்களை இன மத அடிப்படையில் பிரிக்கும் குறுகிய அரசியல் எண்ணம் கொண்ட பிரிவினைவாதிகளுக்கெதிராகவும் செயற்பட இந்தப் புதிய வருடத்தில் திடசங்கற்பம் கொள்வோமாக.

மேலும், பாதிக்கப்பட்ட சமூகங்கள் தமது நீண்டகாலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் இந்தப் புதிய வருடத்தில் அடைந்திட வேண்டும் என நான் பிரார்த்தனை செய்கின்றேன்

நீதி மற்றும் சமத்துவம் என்பவற்றின் அடிப்படையில் பிரிக்க முடியாத – பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் தேசிய பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை அடைந்திட முன்வருமாறு அரசியல் தலைவர்கள், சமய தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் ஆகியோரை அழைத்து நிற்கிறேன்” – என்றுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading