SLIIT வரலாற்றிலேயே 3,500-க்கும் மேற்பட்ட பட்டதாரிகளைக் கொண்ட தொகுதியை கௌரவித்துள்ளது
SLIIT தனது செப்டெம்பர் 2026 பட்டமளிப்பு விழாவை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் மூலம் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்நிகழ்வில் 3,500-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கௌரவிக்கப்பட்டனர், இது அந்நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய பட்டதாரித் தொகுதியாகும். SLIIT மாலபே வளாகத்தில் செப்டெம்பர் 14 முதல் 19 வரை நடைபெற்ற இந்த ஆறு நாள் பட்டமளிப்பு விழாவில், கணினித் துறை, வணிகம், பொறியியல் மற்றும் கட்டிடக்கலை, மற்றும் மானுடவியல் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகள் ஒன்றிணைந்தனர்.
இந்த ஆண்டு பட்டமளிப்புத் தொகுதியின் எண்ணிக்கை SLIIT நிறுவன ரீதியான மைல்கல்லைத் தாண்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. பொருளாதார மாற்றத்திற்குத் தேவையான திறமையான பணியாளர்களை வலுப்படுத்த இலங்கை முயன்று வரும் வேளையில், தொழில் துறைக்குத் தயாரான 3,500-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இப்போது வேலைவாய்ப்பு, தொழில்முனைவு, ஆராய்ச்சி மற்றும் முதுகலை கல்விப் பாதைகளை நோக்கிச் செல்கின்றனர்.
இலங்கையின் பொது முதலீட்டுத் திட்டம் 2026–2030-இன் கீழ், 2030ம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப ஏற்றுமதி, 15 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் திறன் கொண்ட 200,000 பணியாளர்களை உருவாக்குதல் ஆகியவற்றை நாடு இலக்காகக் கொண்டுள்ளது. புத்தாக்கம், தொழில்முனைவு மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகியவையும் முன்னுரிமைக்குரிய அம்சங்களாக உள்ளன் இவை கல்வி மற்றும் தொழில் துறைத் தேவைகளுக்கு இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை என்பதை உணர்த்துகின்றன.
பட்டதாரிகளின் இந்த பங்களிப்பிற்குப் பின்னால் உள்ள ஒரு முக்கிய பலம், SLIIT-இன் வேலைவாய்ப்பு மீதான கவனமாகும். இந்த நிறுவனம், பட்டம் பெற்ற ஆறு மாதங்களுக்குள் 98% பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை பதிவு செய்கிறது. இது, தொழில்துறை தேவைகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு கல்வி மாதிரியால் ஆதரிக்கப்படுகிறது. இதில் கல்வித் துறைகள் வழக்கமான தொழில்துறை ஆலோசனைகளைப் பேணுகின்றன, மேலும் தொழில்துறை கூட்டாளர்கள் பாடத்திட்ட மேம்பாட்டிற்கும் வளர்ந்து வரும் திறன் தேவைகளுக்கும் பங்களிக்கின்றனர்.
மாணவர்கள் உள்ளகப் பயிற்சிகள், தொழிற்பயிற்சி, தொழில் வழிகாட்டுதல் மற்றும் தொழில்தருநர்களுடனான ஈடுபாடு ஆகியவற்றிற்கும் உட்படுத்தப்படுகிறார்கள். இவை, தகவல் தொடர்பாடல், தகவமைப்பு, குழு உழைப்பு மற்றும் பிரச்சினையைத் தீர்க்கும் திறன்களுடன் தொழில்நுட்பத் திறனையும் வலுப்படுத்துகின்றன.
SLIIT பட்டதாரிகள், வலுவான ஆராய்ச்சி சார்ந்த கல்விச் சூழலிலிருந்தும் பயனடைகிறார்கள். 2025 Stanford–Elsevier உலகளாவிய தரவரிசையில், SLIIT-இன் ஆறு விரிவுரையாளர்கள் உலகின் முதல் 2% விஞ்ஞானிகள் மத்தியில் இடம்பெறுகின்றவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இது மாணவர்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிபுணத்துவம், ஆராய்ச்சி சார்ந்த கற்பித்தல் மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றுக்கான அணுகலை வழங்குகிறது.
இந்த நிறுவனம், வழக்கமான வேலைவாய்ப்புடன் சேர்த்து தொழில்முனைவையும் ஊக்குவிக்கிறது. அதன் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவுச் சூழலமைப்பின் மூலம், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தொடக்க வணிக முயற்சி மேம்பாடு, தொழில்துறை ஒத்துழைப்பு, அறிவுசார் சொத்துரிமை மற்றும் வணிகமயமாக்கல் ஆகியவற்றில் ஆதரவைப் பெறுகிறார்கள். இது, பட்டதாரிகள் தற்போதுள்ள வேலைகளை நிரப்புவதோடு மட்டுமல்லாமல், வணிகங்களைக் கட்டியெழுப்பவும், புதிய தீர்வுகளை உருவாக்கவும், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும் வழிவகுக்கிறது.
இந்த நிகழ்வுக்கு மேலும் முக்கியத்துவம் சேர்க்கும் வகையில், இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகருமான திரு. துமிந்த ஹுலங்கமுவ; Liverpool John Moores பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திமோதி ஜேம்ஸ் நிக்கோல்; Maga Engineering Pvt. Ltd நிறுவனத்தின் இணை முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. மெகா குலரத்ன; Bedfordshire Business School பல்கலைக்கழகத்தின் திரு. கிறிஸ் மார்ஷல்; Manchester Metropolitan பல்கலைக்கழகத்தின் கலாநிதி ரேச்சல் வியாடர் நோல்ஸ்; மற்றும் McLarens குழும நிறுவனங்களின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஷெஹாரா டி சில்வா உள்ளிட்ட அரசாங்கம், தொழில்துறை மற்றும் சர்வதேச கல்வித்துறையைச் சேர்ந்த பிரத்தியேக பிரதம விருந்தினர்கள் பட்டமளிப்பு விழாக்களில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



You must be logged in to post a comment.