Local

கூட்டமைப்பின் தாளத்துக்கு ஆடும் ஐ.தே.கவுக்கு ஆதரவா? – சு.க. எம்.பிக்களுக்கு எதிராக முதலமைச்சர்கள் போர்க்கொடி

ஐக்கிய தேசிய கட்சி அரசுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கக் கூடாது என்றும், ஐ.தே.கவுடன் கூட்டு அரசை அமைப்பதில் இருந்து அவர்களை விலகி இருக்குமாறும், ஆறு மாகாணங்களின் தற்போதைய மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் கோரியுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இவர்கள் நேற்று மாலை மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவின் இல்லத்தில் சந்தித்து இந்தக் கருத்தை வெளியிட்டனர்.

இங்கு கருத்து வெளியிட்ட மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, “ஐ.தே.கவுடன் மீண்டும் தேசிய அரசை அமைக்கும் எண்ணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குக் கிடையாது.

எனவே, ஐ.தே.க. அரசுக்கு சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கக் கூடாது.

எவராவது, ஐ.தே.க. அரசில் இணைந்துகொள்ள விரும்பினால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி அவ்வாறு ஆதரவு வழங்கலாம்” என்று கூறினார்.

அதேவேளை, வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜெயரத்ன இங்கு கருத்து வெளியிடுகையில், “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எந்தவொரு உறுப்பினரும், ஐ.தே.க. அரசில் அமைச்சராகப் பதவியேற்க வேண்டாம் என்று ஜனாதிபதி கோருவார்” என நம்பிக்கை வெளியிட்டார்.

முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா உரையாற்றியபோது, “ஐ.தே.க. அரசை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தொலைவில் இருந்து கட்டுப்படுத்தப்போகின்றது. கூட்டமைப்பின் தாளத்துக்கே ஐ.தே.க. அரசு ஆடும்” என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading