Lead NewsLocal

கால அவகாசம் என்ற பெயரில் மேலும் இரண்டு ஆண்டுகள் ஐ.நாவின் பிடிக்குள் இலங்கை! – மஹிந்த அணி கொந்தளிப்பு

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை மீதான தீர்மானத்துக்கு ரணில் அரசு இணை அனுசரணை வழங்கியமையால் எமது நாடு தொடர்ந்து சர்வதேச சமூகத்திடம் சிறை வைக்கப்பட்டுள்ளது. கால அவகாசம் என்ற பெயரில் ஐ,நாவின் பிடிக்குள் எமது நாடு சிக்கித் தவிக்கின்றது.”

– இவ்வாறு சீற்றத்துடன் தெரிவித்தனர் பிரதான எதிர்க்கட்சியினரான மஹிந்த அணியினர்.

“இந்த நிலைமைக்கு ரணில் அரசும் அந்த அரசுக்கு ஆதரவை வழங்கிவரும் சம்பந்தன் – சுமந்திரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமே காரணம்” என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கும் வகையிலான தீர்மான முன்வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன், கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மொன்ரனிக்கோ ஆகிய நாடுகள் இணைந்து எதிர்வரும் 20ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை சமர்ப்பிக்கவுள்ளன.

இது தொடர்பான முன்வரைபு ஏற்கனவே வெளியாகியுள்ளது. இந்த வரைபு மீதான முறைசாராக் கலந்துரையாடல் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இது தொடர்பில் மஹிந்த அணியின் நிலைப்பாடு என்னவென்று அந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன ஆகியோரிடம் வினவியபோதே அவர்கள் மேற்கண்டவாறு கூறினார்கள்.

அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-

“மஹிந்த அரசின் ஆட்சியில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து – போரில் வெற்றியீட்டி நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தனர் எமது இராணுவத்தினர்.

ஆனால், அவர்களைப் பழிவாங்கும் வகையில் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகப் போர்க்குற்றத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

நாம் ஆட்சியில் இருந்தபோது இந்தத் தீர்மானத்தை அடியோடு நிராகரித்திருந்தோம். சர்வதேசத் தலையீடுகளைத் தடுத்து நிறுத்தியிருந்தோம்.

2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ரணில் அரசு, கால அவகாசம் என்ற பெயரில் ஜெனிவாத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியது. ரணில் அரசு இணை அனுசரணை வழங்குவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பின்புலத்தில் இருந்தார்கள்.

இந்தக் கால அவகாசம் தொடர்ந்து நீடிக்கப்போகின்றது. இலங்கையை மீண்டும் தொடர் கண்காணிப்புக்குள் – சிறைக்குள் சர்வதேச சமூகம் வைத்திருக்கப் போகின்றது. இது எமது நாட்டுக்குத்தான் பாதகம்” – என்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading