Lead NewsLocal

ஐ.நாவின் 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் இலங்கை! பிரிட்டன் – ஜேர்மனி இணைந்து புதிய தீர்மானம்!!

* கனடா, அயர்லாந்து, மொன்ரெனிக்ரோ, வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் இணை அனுசரணை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பிரிட்டனும் ஜேர்மனியும் இணைந்து புதிய தீர்மானமொன்றை முன்வைத்துள்ளன.

இப்புதிய தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நேற்று திங்கட்கிழமை முன்வைக்கப்பட்டுள்ளது.

‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் இத்தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது.

பிரிட்டன், ஜேர்மனி இணைந்து முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான இத்தீர்மானத்துக்கு கனடா, அயர்லாந்து, மொன்ரெனிக்ரோ, வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.

இந்தத் தீர்மானத்துக்கமைய 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 43ஆவது கூட்டத் தொடரில், ஐ.நா மனித உரிமை ஆணையாளரினால் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன், 2015இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் விரிவான அறிக்கை ஒன்றை 2021 மார்ச் மாதம், சமர்ப்பிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் சபையில் விவாதம் ஒன்று நடத்தப்படும் என்றும் அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை எடுத்துள்ள முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, 30/1 தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இப்புதிய தீர்மானத்துக்கு இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading