இடைக்கால கணக்கு அறிக்கை நாளை சபையில் சமர்ப்பிப்பு!
புதிய அமைச்சரவை இன்று நியமிக்கப்பட்டிருப்பினும் இடைக்கால கணக்கு அறிக்கை நாளை வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
இடைக்கால கணக்கு அறிக்கையை நிறைவேற்றிக் கொண்டதன் பின்னர் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அரச செலவுகளை சரியான முறையில் மேற்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் மூன்று மாத காலப் பகுதிக்கான அரசின் செலவைச் சமாளிப்பதற்கு என இடைக்கால கணக்கு அறிக்கை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
“உலகப் பொருளாதார நிலைமை மற்றும் தற்போது இலங்கையில் உள்ள பொருளாதார சூழ்நிலை தொடர்பில் கவனத்தில் கொண்டு வழங்கக்கூடிய ஆகக்கூடிய நிவாரணத்தைப் பொதுமக்களுக்குப் பெற்றுக்கொடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். வழங்கக்கூடிய பொதுமக்களுக்கான ஆகக்கூடிய நிவாரணத்துக்கான விடயங்களும் இடைக்கால கணக்கு அறிக்கையில் உள்வாங்குமாறு பிரதமர், இலங்கை மத்திய வங்கிக்கு அறிவித்துள்ளார்” எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
