Lead NewsLocal

3 வீதிகளின் பெயர்ப்பலகைகளில் மீண்டும் தமிழ்மொழி இணைப்பு!

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தெற்கில் அகற்றப்பட்ட 3 வீதிகளின் தமிழ்மொழிமூல பெயர்பலகைகள் மீளவும் பொருத்தப்பட்டுள்ளன. எனினும், ஒரு வீதியில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் அகற்றப்பட்டுள்ளன.

பாணந்துறையில் உள்ள சுசந்த மாவத்தை மற்றும் வத்தளை கெரவலப்பிட்டிய வீதி பெயர்ப்பலகைகளிலேயே தமிழ்மொழி மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் வீதிப் பெயர்ப்பலகைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இடம்பெற வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படும் நிலையில் சிறுபான்மை மக்களை அதிருப்தியடைய வைக்கும் வகையில் இந்தச் செயற்பாடு அமைவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

வத்தளை கெரவலப்பிட்டிய வீதியின் பெயர்ப்பலகையில் தமிழ்மொழி நீக்கப்பட்டதாகச் செய்தி வெளியாகி 9 மணி நேரத்தின் பின் அது மீளவும் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன், பாணந்துறை சுசந்த மாவத்தை வீதியின் பெயர்ப்பலகையில் தமிழ்மொழி மீது வர்ணம் பூசப்பட்ட நிலையில் இன்று மீண்டும் தமிழ்மொழியில் வீதியின் பெயர் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியை பாணந்துறை நகர சபை முன்னெடுத்தது.

இதேவேளை, வீதிகளின் பெயர்ப்பலகைகளில் காணப்படும் தமிழ்மொழியை நீக்கும் பணியை அரசியல் குழு ஒன்று முன்னெடுப்பதாகத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸார் விசேட கவனம் செலுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading