LocalNorth

ரணில் பங்கேற்ற நிகழ்வுகளில் கூட்டமைப்புக்கு முன்னுரிமை!

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான் பங்கேற்ற நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கிய சம்பவங்கள் இடம்பெற்றன.

நேற்றுமுன்தினம் கோப்பாய் பிரதேச செயலகக் கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு முதலில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் பலரும் வருகை தந்திருந்தனர்.

இதன்போது பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களைக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் வெற்றிலை கொடுத்து வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து அரச அதிகாரிகள் பொன்னாடை போர்த்தியும் ஆராத்தி எடுத்தும் வரவேற்றனர். அதேபோன்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சித்தார்த்தன், ஈ.சரவணபவன் ஆகியோர் கைலாகு கொடுத்து வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து புதிய கட்டடத்தைத் திறப்பற்கு ரணில் விக்கிரமசிங்க தயாரானார். ஆனாலும், அதன்போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவை பிரதமருக்கு அருகில் காணவில்லை.

அப்போது நாடா வெட்டுவதற்கு மாவை சேனாதிராஜாவை தனதருகில் வருமாறு அழைத்த பிரதமர், அவரிடமும் நாடா வெட்டு வதற்கு ஒரு கத்தரிக்கோலை எடுத்துக் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து புதிய கட்டடத்தை திறப்பதற்கான நாடாவை இருவருமாக இணைந்து வெட்டினர்.

இதன் பின்னர் மங்கள விளக்கேற்றல் நடைபெற்றபோது பிரதமரும் அமைச்சர்களும் மங்கள விளக்கேற்றினர். மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன் ஆகியோரும் மங்கள விளக்கேற்றியிருந்தனர்.

ஆனால், சித்தார்த்தனைக் காணவில்லை. உடனே சித்தார்த்தனையும் அழைத்த பிரதமர் அவரையும் மங்கள விளக்கேற்ற வைத்தார்.

அதேபோன்று கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்வுகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பிரதமர் ரணில் முன்னுரிமை வழங்கினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading