FeaturesLead NewsLocal

‘மே 18’ நினைவேந்தலுக்கு தமிழருக்கு உரிமையுண்டு! – இராணுவத்தால் இடையூறு இருக்காது என தளபதி தெரிவிப்பு

“மே 18 நினைவேந்தலைக் கடைப்பிடிக்க தமிழ் மக்களுக்கு முழுமையான சுதந்திரமும் உரிமையும் உண்டு. அவர்களால் மேற்கொள்ளப்படும் நினைவேந்தலுக்கு இராணுவம் எவ்வித இடையூறும் கொடுக்காது.”

– இவ்வாறு தெரிவித்தார் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஷ் சேனநாயக்க.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கணடவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்டவிதிகளுக்கு உட்பட்டு, நினைவு தினத்தைக் கடைப்பிடிப்பதற்கான உரிமை அனைவருக்கும் காணப்படுகின்றது.

இலங்கையில் அவசரகாலச் சட்டம் நடைமுறையில் உள்ள தருணத்தில், இவ்வாறான நினைவு தின நிகழ்வுகளை நடத்துகின்றமை சர்ச்சைக்குரிய விடயம் என்று பேசப்படுகின்றது. உண்மையில் அவசரகாலச் சட்டமும், நினைவு தினக் கடைப்பிடிப்பும் இரு வேறு விடயங்கள். நினைவு தினத்தை உரிய விதிமுறைகளின் கீழ் முன்னெடுக்கலாம்” – என்றார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,

“இலங்கையில் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் கிடையாது. பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு, கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புத்தளம், குருணாகல் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் இராணுவத்துக்கு எந்தவித தொடர்பும் கிடையாது” – என்று மேலும் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading