FeaturesLead NewsLocal

தமிழர்களைக் கொல்லவில்லை! போரையே முடித்து வைத்தோம்!! – இப்படிக் கூறுகின்றார் கோட்டா

“போரை நடத்தி, தமிழ் மக்களை நாங்கள்தான் கொன்றொழித்தோம் என்ற தோற்றப்பாடொன்று இன்றளவில் தமிழர்கள் மத்தியிலே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. உண்மையில் நாங்கள் போரை உருவாக்கவில்லை. அது உருவாகுவதற்கு காரணமாகவும் இருக்கவில்லை. நாங்கள் செய்ததெல்லாம் நீண்டகாலப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தமை மாத்திரமே.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

மலையக இளைஞர் அணியால் நேற்று சனிக்கிழமை பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்ஸ் எட்ஜில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மலையக இளைஞர் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றதாக எம்மீது பழி சுமத்தி, மக்கள் மத்தியில் தவறான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்கு போரைத் தோற்றுவித்தவர்கள் முயற்சிக்கின்றார்கள். எனவே, அத்தகைய தவறான புரிதலை முறியடித்து, நாம் போரை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டுக்கு நல்லதையே செய்தோம் என்பதை மலையகம் உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு மலையக இளைஞர் அணி எடுத்துக்கூற வேண்டும்” – என்றார்.

இந்த நிகழ்வில், இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் மனைவி கலந்துகொண்டு மங்கள விளக்கை ஏற்றி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading