LocalUp Country

பள்ளத்தில் வீழ்ந்தது பஸ்! 2 பேர் பலி; 59 பேர் காயம்!!

வலப்பனை – நுவரெலியா பிரதான வீதியில் மாஹாஊவாபத்தன பகுதியில் நேற்றிரவு 7 மணியளவில் தனியார் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 59 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நுவரெலியாவிலிருந்து நுவரெலியா வலப்பனை வழியாக அம்பாறை நோக்கிப் பயணித்த தனியார் சுற்றுலா பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

அம்பாறை பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு நுவரெலியாவுக்குச் சென்று, மீண்டும் அம்பாறை செல்லும் வழியிலேயே குறித்த பஸ், நேற்றிரவு 7 மணியளவில் மாஹாஊவாபத்தன எனும் இடத்தில் பாரிய வளைவுப் பகுதியில் பாதையை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதன்போது, பஸ்ஸில் பயணித்த 61 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக வலப்பனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து அனைவரும் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இதன்போது வலப்பனை வைத்தியசாலையில் வைத்து 28 வயது மதிக்கத்தக்க அம்பாறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இதேவேளை, நுவரெலியா வைத்தியசாலையில் வைத்து கர்ப்பணித் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் கவலைக்கிடமாக இருந்த சிலர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகவே குறித்த பாரிய வளைவுப் பகுதியில் பஸ்ஸை செலுத்த முடியாததன் காரணமாகவே, இந்த விபத்து நேர்ந்தது என நேரடி விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர். படுகாயமடைந்தவர்களில் சிலர் நுவரெலியா ஆதார வைத்தியசாலையிலும், சிலர் கண்டி வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் நுவரெலியா மற்றும் வலப்பனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் வலப்பனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிசாந்தன்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading