Local

சு.கவின் ஆதரவின்றி ‘பட்ஜட்’ நிறைவேறும்! – ஐ.தே.க. சவால்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒத்துழைப்பு இன்றி 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

கந்தான, நாகொடயில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசைப் பல தடவைகள் தோற்கடிக்க முயற்சித்தனர். 52 நாட்களில்கூட அரசைத் தோற்கடிக்க முயற்சித்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் முறை வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் வென்றோம். அவர்கள் வாக்குகளைப் பயன்படுத்தினால், வெற்றி பெறுவதற்கான துரும்புச் சீட்டுக்கள் எங்களிடம் இருக்கின்றன. மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பிலும் நாம் வென்றே தீருவோம்.

ஜனாதிபதித் தேர்தலில் உரிய நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தகுதியான வேட்பாளரை நிறுத்தும். யார் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தாலும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெறக்கூடிய வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறும்.

ஒரே குடும்பம் தொடர்ந்தும் ஆட்சிக்கு வருவதை மக்கள் மட்டுமல்ல, இளம் தலைமுறையினரும் விரும்பமாட்டார்கள்.

புதிய வேலைத்திட்டத்துடன் தேர்தலைச் சந்தித்தால், ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

நாங்கள் என்ன செய்திருக்கின்றோம், என்ன செய்யவில்லை என்பதை தேர்தல் வரும்போது காட்டுவோம்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading