Sports

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் ‘சம்பியன்’பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 56 கோடி பரிசு!

இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு 56 கோடி ரூபா பரிசாக வழங்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

12ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் எதிர்வரும் 30ஆம் திகதி தொடங்குகின்றது. இதில் நடப்பு சம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவு, நியூசிலாந்து, இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

46 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் ஆட்டம் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்தப் போட்டிக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.140 கோடியாகும். சம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.56 கோடியும், இரண்டாவது இடம் பெறும் அணிக்கு ரூ.28 கோடியும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பியன் பட்டம் வென்ற அணிக்கு கடந்த முறை (2015) ரூ.52 கோடியும், இரண்டாவது இடம்பெற்ற அணிக்கு ரூ.24 கோடியும் வழங்கப்பட்டது. தற்போது இந்த இரண்டு தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரையிறுதியில் தோல்வி பெறும் அணிகளுக்கு ரூ. 11 கோடியே 22 இலட்சம் பரிசாகக் கிடைக்கும். இந்தத் தொகையும் இம்முறை உயர்த்தப்பட்டிருக்கின்றது. கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் அரையிறுதியில் தோல்வி கண்ட அணிகளுக்கு ரூ. 8 கோடியே 40 இலட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

லீக் சுற்றில் அணிகளின் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.56 இலட்சம் கிடைக்கும். லீக் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு ரூபா ஒரு கோடியே 40 இலட்சம் வழங்கப்படும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading