FeaturesLead NewsLocal

ஐ.நாவுடன் முட்டி மோத முடியாது! ஆணையாளரின் அறிக்கைக்கு அரசு ஆராய்ந்தே பதிலளிக்கும்!! – ரணில் தெரிவிப்பு

“இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை எமது நாட்டுக்குச் சவால் மிக்கது. இது தொடர்பில் அரச உயர்பீடம் ஒன்றுகூடி தமது நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கும்.”

– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

“எமது உத்தியோகபூர்வ நிலைப்பாடு ஜெனிவாவிலும் வைத்து அறிவிக்கப்படும். இலங்கை தொடர்பில் இம்முறையும் ஐ.நாவில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்துக்கு நாம் இணை அனுசரணை வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய இலங்கைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை, போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக உலகளாவிய ரீதியில் சாத்தியமான விசாரணை, ஐ.நா. ஆணையாளர் அலுவலகம் இலங்கையில் அமைக்கப்படுதல்,

இலங்கையைத் தொடர்ந்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு நிகழ்ச்சி நிரலுக்குள் வைத்திருத்தல் ஆகிய பரிந்துரைகளை உள்ளடக்கி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்லே பச்செலெட் காட்டமான அறிக்கையை கடந்த வெள்ளிக்கிழமை விடுத்திருந்தார்.

இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளரின் அறிக்கையை நான் உன்னிப்பாகப் பார்த்தேன். அதில் எமது நாட்டுக்கு சவால்மிக்க பல விடயங்கள் உள்ளன. இது தொடர்பில் உடன் கருத்துத் தெரிவிக்க முடியாது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் அரச உயர்பீடம் ஒன்றுகூடி விரிவாக ஆராயும். அரசின் நிலைப்பாட்டை எமது உயர்பீடம் விரைவில் அறிவிக்கும். எமது உத்தியோகபூர்வ நிலைப்பாடு ஜெனிவாவிலும் வைத்து அறிவிக்கப்படும்.

இலங்கை தொடர்பில் கடந்த முறை ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கினோம். நாட்டின் நலன் கருதி இதனைச் செய்தோம். இம்முறையும் ஐ.நாவில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்துக்கு நாம் இணை அனுசரணை வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

ஐ.நாவைவோ அல்லது சர்வதேச சமூகத்தையோ பகைத்துக்கொண்டு எம்மால் செயற்பட முடியாது. அதற்காக நாம் நாட்டைக் காட்டிக்கொடுக்கின்றோம் என்று எவரும் நினைக்கக்கூடாது” – என்றார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading