Lead NewsLocal

அரசமைப்பின் இறுதி வரைவிலும் ‘ஒருமித்த நாடு’ என்ற சொல்வரும்! – ரணில் உறுதியளித்தார் எனக் கூறுகின்றார் சம்பந்தன்

“ஏக்கிய ராஜ்ஜிய என்றால் ஒருமித்த நாடு என்றே புதிய அரசமைப்பு வரைவுக்கான இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இறுதி அரசமைப்பிலும் அது அவ்வாறே இடம்பெறும் என்று நம்புகின்றோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அதற்கான உறுதிமொழியை வழங்கியுள்ளார்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

‘அரசமைப்பில் ஏக்கிய ராஜ்ஜிய என்ற சொல் மூன்று மொழிகளிலும் இருக்கும். அதில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படாது. ஏக்கிய ராஜ்ஜியவுக்கு தமிழில் ஒருமித்த நாடு என்ற பதத்தை இணைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டபோதிலும் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை’ என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் சபை முதல்வருமான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் கேட்டபோது,

“புதிய அரசமைப்பு வரைவுக்கான இடைக்கால அறிக்கையில் இது தொடர்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஏக்கிய ராஜ்ஜிய என்றால் ஒற்றையாட்சி என்ற குழப்பம் இருந்தது. ஆனால், இடைக்கால அறிக்கையில் ஒருமித்த நாடு என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய அரசமைப்புக்கான இறுதி வரைவிலும் அதுதான் வரும் என்று நம்புகின்றேன். இந்தச் சொல் தொடர்பில் சட்டச் சிக்கல் வந்தாலும், இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு ஒருமித்த நாடு என்ற சொல்லே மேலோங்கும்.

இந்தச் சொல்லை வைத்து தமிழ் மக்களிலும், சிங்கள மக்களிலும் சில தனி நபர்கள் சுயலாப அரசியல் செய்கின்றார்கள்.

இந்தச் சொல் நாட்டின் மூன்று இனமக்களின் அரசியல் தீர்வுடன் சம்பந்தப்பட்ட சொல். நல்லிணக்கத்துக்கு மூல காரணமாக அமையும் சொல்.

அப்படிப்பட்ட முக்கியமான சொல்லை வைத்துக் கொண்டு சில்லறைத்தனமான வேலைகளில் ஈடுபடக் கூடாது.

இந்தச் சில்லறை வேலைகளுக்கு சில சிங்கள, தமிழ் ஊடகங்களுக்கும் துணைபோவதுதான் கவலைக்குரியது.

இந்தச் சொல்லாடல் தொடர்பில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பில், ஏக்கிய ராஜ்ஜியவுக்கு ஒருமித்த நாடு என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்திருந்தார்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading