LocalNorth

படை வசமுள்ள கேப்பாப்பிலவு காணிகளை ஜனவரி 25 இற்கு முன் விடுவிக்க அவகாசம்! – இல்லையேல் பலவந்தமாக நுழைவோம் என மக்கள் எச்சரிக்கை

கேப்பாப்பிலவு மக்கள் தமது பூர்வீகக் காணிகளில் அடாத்தாக அமைக்கப்பட்ட இராணுவ முகாமை அகற்றித் தம்மை தமது சொந்த பூமியில் குடியமர்த்துமாறு கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள், நேற்றுத் தமது காணிகளுக்குள் தாமாக நுழைய முயன்றமையால் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் விடுவிக்கப்படும் என்ற உறுதிமொழி பொய்த்துப்போன நிலையில் நேற்று மக்கள் தமது காணிக்குள் தாமாகச் செல்வதாகத் தெரிவித்து உடைமைகளுடன் சென்றபோது இராணுவ முகாம் வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து முகாம் வாயிலில் மக்கள் கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் முகாமுக்குள் நுழைய முற்பட்டதை அடுத்து அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனை அடுத்து மக்களுடன் பொலிஸார் கலந்துரையாடினர்.

இதன்போது இராணுவத் தளபதி வந்து உறுதிமொழி தரவேண்டும் என மக்கள். கோரினர்.

இராணுவத்தினர் மக்களுடன் வந்து கலந்துரையாடமாட்டார் எனவும் மாவட்ட செயலாளரை அழைப்பதாகவும் பொலிஸார் அங்கு கூறினர்.

இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட மேலதிக செயலாளர் கோ. தனபாலசுந்தரம் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் இ.பிரதாபன், முல்லைத்தீவு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் செல்வி ஆ. லதுமீரா, அந்தப் பகுதி கிராம அலுவலர் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த அவர்கள், இந்த விடயத்தை முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ஊடாக ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்று ஜனவரி 25 ஆம் திகதிக்குள் உரிய பதிலைப் பெற்றுத் தருவதாகவும், அதுவரை போராட்டத்தை நிறுத்துமாறும் கோரினர்.

இதையடுத்து எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு எதுவும் கிடைக்காவிட்டால் சுட்டாலும் பரவாயில்லை, தமது காணிக்குள் செல்வோம் எனத் தெரிவித்துவிட்டு இராணுவ முகாம் வாசலிலிருந்து மக்கள் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading