FeaturesLead NewsLocal

ஐ.நா. மேற்பார்வையுடன் இலங்கைக்கு இறுக்கமான காலவரையறை வேண்டும்! – சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது என அதன் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை விடயத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இறுக்கமான காலவரையறை வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

யாழ். பிரதான வீதியிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே சுமந்திரன் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் வரவேற்கின்றோம்.

இலங்கை விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இறுக்கமான காலவரையறை இருக்க வேண்டும்.

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற நியாயாதிக்கத்துக்கு இணங்கக் கூடிய ரோம் சட்டத்துக்கு இலங்கை இணங்கவேண்டும் என்று கூறப்பட்டிருப்பதையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

பாதுகாப்புச் சபையூடாக இந்த விடயங்களைக் கையாள முடியாது. அவ்வாறு முடியும் என்று கூறுபவர்கள் அதனைச் செய்யலாம். நாங்களும் அதனை வரவேற்போம்.

இந்த வருடமும் இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் சபைதான் எமக்கு இருக்கின்ற பலமான பொறிமுறை. ஆகவே, அந்தப் பொறிமுறையை விலக்கிக்கொள்ளக் கூடாது.

இலங்கை ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் உள்ளடக்கங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்வதன் காரணமாகப் புதிய தீர்மானத்தில் ஓர் இறுக்கமான கால அட்டவணை கொடுப்பது பற்றி வெளிநாடுகள் ஆராய வேண்டும் என்பது எமது கோரிக்கையாகும்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading