VFS Global அனுசரணையில் கண்டியில் முன்னெடுக்கப்பட்ட VISA செயற்திட்டம்
VFS Global நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், ASSIST அமைப்புடன் இணைந்து இலங்கையின் தேசிய தூய்மையான உற்பத்தி மையம் (NCPC), சுற்றுலாத் துறையில் ‘சுற்றாடல் நிலைபேற்றுத்தன்மைக்கான தொழில்சார் தூதுவர்கள்’ (Project VISA – Vocational Initiative for Sustainable Ambassadors in Tourism) எனும் செயற்திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இலங்கையின் சுற்றுலாத் துறைக்கான மனிதவளத்தை வலுப்படுத்துவதற்கும், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு நிலைபேறான மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய சுற்றுலாத் துறை தொடர்பான அத்தியாவசியத் திறன்களை வழங்குவதற்குமாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் கலாசார, சமூக மற்றும் சுற்றாடல் மரபுரிமைகளைப் பாதுகாப்பதை ஊக்குவிக்கும் அதேவேளை, வேலைவாய்ப்புத் தகைமைகளை மேம்படுத்துவதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டது.
சுற்றாடல் மற்றும் சூழல்நேயச் சுற்றுலா நடைமுறைகள், கலாசார விளக்கம் மற்றும் கதை சொல்லும் கலை, சிறந்த தொடர்பாடல் மற்றும் வாடிக்கையாளர் சேவை, சுற்றாடல் பொறுப்புணர்வு, காலநிலை மீண்டுயிர்ப்புத்தன்மை, தொழில்சார் பாதுகாப்பு, சுற்றுலாத் துறை சார் தொழில்முனைவு மற்றும் நிதிசார் அறிவு போன்றவற்றில் தொழில்துறைக்குத் தேவையான பயிற்சிகளை ஒரு கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையின் ஊடாக வழங்குவதன் மூலம், அனைவரையும் உள்ளடக்கிய சமூக அடிப்படையிலான சுற்றுலாவையும், நீண்டகால தொழில்சார் தயார்நிலையையும் இந்த முயற்சி ஊக்குவித்துள்ளது.
இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் காலி, நீர்கொழும்பு, ரிவர்ஸ்டன் மற்றும் கண்டி ஆகிய முக்கிய சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கியதாக நான்கு தொகுதிப் பயிற்சிகள் (four batches) பூர்த்தி செய்யப்பட்டு, 123 பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இப்பயிற்சி நெறியில் 25% பெண்கள் பங்கேற்றமை, பாலின உள்ளடக்கத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது. கலந்துரையாடல் பட்டறைகள், பாத்திரமேற்று நடித்தல், களப்பயணங்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் வழிகாட்டல்கள் ஊடாக இந்தப் பயிற்சி அமர்வுகள் முன்னெடுக்கப்பட்டதோடு, நடைமுறை ரீதியிலான மற்றும் செயற்பாட்டு ரீதியான கற்றல் பெறுபேறுகளையும் இவை உறுதி செய்துள்ளன.
திறன் மேம்பாட்டிற்கு மேலதிகமாக, பயிற்சியளிக்கப்பட்ட பங்கேற்பாளர்களை சுற்றுலாத்துறை நிறுவனங்கள் மற்றும் இத்துறையுடன் தொடர்புடைய ஏனைய தரப்பினர்களுடன் இணைப்பதன் ஊடாக வேலைவாய்ப்புத் தொடர்புகளை இத்திட்டம் ஆதரித்துள்ளது. இது பங்கேற்பாளர்கள் சுற்றுலாத்துறையில் தொழில்சார் நிலைகளுக்கு மாறுவதற்கும், நிலையான வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்புவதற்கும் வழிவகுத்துள்ளது.
இத்திட்டத்தின் வெற்றிகரமான நிறைவைக் குறிக்கும் வகையில் அண்மையில் கண்டி, Royal Kandyan Hotel இல் விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில், இலங்கை சுற்றுலா அபிவிருத்திக்கான விசேட ஜனாதிபதி பணிக்குழுவின் உறுப்பினர் சுரஞ்சித் வாவிட்ட, கண்டி மாநகர சபையின் மாநகர ஆணையாளர், VFS Global நிறுவனத்தின் துணை CHRO திருமதி. நீத்து வாதவன், VFS Global நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் மன்பிரீத் அரோரா, இலங்கையின் தேசிய தூய்மையான உற்பத்தி மையத்தின் (NCPC) பிரதம நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் சமந்த குமாரசேன, ASSIST அமைப்பின் இலங்கைக்கான தலைவர் கரன் மற்றும் NCPC நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திருமதி. சத்துரங்கி குணசேகர உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களும் பங்காளர்களும் கலந்துகொண்டனர்.
VFS Global இடமிருந்து கருத்து:
VFS Global இன் தெற்காசிய பிரதம செயற்பாட்டு அதிகாரி யும்மி தால்வார் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பில் சுற்றுலா முக்கிய பங்காற்றுகின்றது. திறன்படைத்த, நிலைபேறாண்மையில் கவனம் செலுத்தும் சுற்றுலா நிபுணர்களுக்கு ஆதரவளிப்பதனூடாக, உள்நாட்டு வாழ்வாதாரங்களை வலிமைப்படுத்த நாம் எதிர்பார்ப்பதுடன், நாட்டின் செழுமையான கலாசார மற்றும் சூழல் பாராம்பரியத்தை பாதுகாக்கவும் எதிர்பார்க்கிறோம். இந்த செயற்பாட்டினூடாக, கல்வி, திறன் விருத்தி மற்றும் தொழில்முயற்சியாண்மை பயிற்சி போன்றவற்றினூடாக இளைஞர்களுக்கு வலுவூட்டி அதனூடாக பொறுப்பு வாய்ந்த வளர்ச்சியை எய்துவதற்கான VFS Global’ இன் அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கான எமது அர்ப்பணிப்பை இந்தத் திட்டம் உறுதி செய்துள்ள நிலையில், எமது சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளினூடாக, பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேசியா, தென் ஆபிரிக்கா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மூலோபாய முதலீடுகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என்றார்.
VFS Global பற்றி
நம்பகமான தொழில்நுட்பச் சேவைகளில் உலகளாவிய முன்னோடியாக, அரசுகள் மற்றும் குடிமக்களுக்கான பாதுகாப்பான நடமாட்டத்திற்கு (Secure Mobility) வலுவூட்டும் VFS குளோபல் நிறுவனம், உலகெங்கிலும் உள்ள அரசுகள் மற்றும் தூதரகங்களுக்கு ஆதரவளிப்பதற்காக, உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு (Generative AI) உள்ளிட்ட தொழில்நுட்பப் புத்தாக்கத்தை ஏற்றுக்கொள்கிறது. விசா, கடவுச்சீட்டு மற்றும் தூதரகச் சேவைகளுக்கான விண்ணப்பங்கள் தொடர்பான நீதிசாராத மற்றும் நிர்வாகப் பணிகளை இந்நிறுவனம் அதன் வாடிக்கையாளர் அரசுகளுக்காக நிர்வகிக்கிறது. இதன் மூலம் உற்பத்தித்திறனை அதிகரித்து, மதிப்பீடு செய்யும் முக்கியமான பணியில் முழுமையாக கவனம் செலுத்த அவர்களுக்கு உதவுகிறது.
தொழில்நுட்ப மேம்பாடு, அதை ஏற்றுக்கொள்வது மற்றும் ஒருங்கிணைப்பதில் பொறுப்பான அணுகுமுறையுடன், இந்நிறுவனம் 70 வாடிக்கையாளர் அரசுகளுக்கு நம்பகமான பங்காளியாகச் சேவை செய்யும் அதே வேளையில், நெறிமுறை நடைமுறைகள் மற்றும் நிலையான தன்மையையும் முதன்மையளிக்கிறது. 165 நாடுகளில் 3,900க்கும் மேற்பட்ட விண்ணப்ப மையங்களை இயக்கி வரும் VFS குளோபல், 2001 ஆம் ஆண்டு முதல் 519 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைச் (Transactions) சிறப்பாகச் செயல்படுத்தியுள்ளது.
சூரிச் மற்றும் துபாயைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள VFS குளோபல், Blackstone Inc. நிர்வகிக்கும் முதலீட்டு நிதிகள் மூலம் பெரும்பான்மையாகச் சொந்தமாக உள்ளது. அத்துடன் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த Kuoni and Hugentobler Foundation உள்ளிட்ட சிறுபான்மை பங்குதாரர்களையும் கொண்டுள்ளது.
* இது VFS குளோபல் மூலம் 327 மில்லியன் பரிவர்த்தனைகள் மற்றும் CiX Citizen Experience மூலம் 192 மில்லியன் பரிவர்த்தனைகளையும் உள்ளடக்கியுள்ளது.

You must be logged in to post a comment.