Lead NewsLocal

விக்கி எதிர் டெனீஸ்வரன் வழக்கு: இன்று வருகின்றது முக்கிய தீர்ப்பு!

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை அவமதித்தார் எனத் தெரிவித்து வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராகத் தாக்கச் செய்த வழக்கில், விக்னேஸ்வரன் தரப்பில் கிளப்பப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனை மீதான தீர்ப்பை நீதிமன்றம் இன்று வழங்க இருக்கின்றது.

மாகாண அமைச்சர் பதவியிலிருந்து தாம் விலக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்படுவது தவறு எனச் சுட்டிக்காட்டி, ஆகவே தம்மைப் பதவியில் தொடர அனுமதிக்கும்படி உத்தரவிடக் கோரி டெனீஸ்வரன் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் அதையொட்டி இடைக்கால உத்தரவு ஒன்றை வழங்கியிருந்தது.

அந்த உத்தரவில் உடனடியாக டெனீஸ்வரன் அமைச்சர் பதவியில் தொடர்வதற்கு ஆவன செய்யுமாறு மன்று பணித்திருந்தது. ஆனால், தாம் பணியில் தொடர அனுமதிக்கப்படவில்லை என்றும், அந்த நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை உதாசீனம் செய்தமை மூலம் முதல்வர் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என்றும் தெரிவித்து டெனீஸ்வரன் மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்தார்.

அந்த வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரிக்க முடியாது எனத் தெரிவித்து விக்னேஸ்வரன் சார்பில் கிளப்பப்பட்ட பூர்வாங்க ஆட்சேபனை குறித்து விசாரணை நடத்திய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு ஜனவரி 31ஆம் திகதி வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

அந்தத் தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading