Lead NewsLocal

இராணுவத் தளபதியுடன் பேசியமை உண்மைதான்! – ஆனால் எவரையும் விடுவிக்கக் கோரவில்லை என்கிறார் ரிஷாத்

“இராணுவத் தளபதியுடன் நான் தொலைபேசியில் பேசியமை உண்மைதான். ஆனால், கைதுசெய்யப்பட்ட எவரையும் விடுதலை செய்யுமாறு அவரிடம் கோரிக்கை எதனையும் நான் விடுக்கவில்லை.”

– இவ்வாறு தெரிவித்தார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, உயிர்த்த ஞாயிறன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் தெஹிவளையில் கைதுசெய்யப்பட்டபோது, அவரை விடுவிக்கும் முயற்சியில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஈடுபட்டார் என்று கூறியிருந்தார். குறித்த சந்தேகநபரின் விடுதலைக்காக அமைச்சர் மூன்று தடவைகள் தொலைபேசி அழைப்பெடுத்து தன்னுடன் பேசியிருந்தார் என்றும் தெரிவித்திருந்தார்.

அது தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்று விளக்கம் அளிக்கையில்,

“தெஹிவளையில் கைதுசெய்யப்பட்ட ஒருவரை விடுதலை செய்யுமாறு இராணுவத் தளபதியிடம் நான் கோரிக்கை விடுக்கவில்லை. ஒருவர் கைதுசெய்யப்பட்டதையடுத்து அப்படி ஒருவர் இராணுவத்தின் தடுப்புக் காவலில் இருக்கின்றாரா? இல்லையா? என்பதையே நான் கேட்டேன். தேவையெனில் எனது தொலைபேசியைப் பரிசோதனை செய்து பாருங்கள். எல்லாம் ஒலிப்பதிவில் உள்ளன.

குண்டுத் தாக்குதல் சம்பவங்களின் பின்னர் கைதுசெய்யப்பட்ட எவரையும் விடுதலை செய்யுமாறு பொலிஸையோ அல்லது இராணுவத்தையோ நான் கேட்கவில்லை. கைதுசெய்யப்பட்டவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பதை என்னிடம் மட்டுமல்ல ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும் உறவினர்கள் கேட்டபடிதான் உள்ளனர்.

நீர்கொழும்புப் பிரதேசத்தில் பாதுகாப்புத் தொடர்பிலும் ஒரு தடவை இராணுவத் தளபதியுடன் பேசினேன். அதாவது, தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மக்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யும் நாளன்று நீர்கொழும்புப் பிரதேசத்தில் பதற்ற நிலைமைகள் தோன்றலாம் என அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பலர் எனக்குத் தெரிவித்தனர்.

இதன் காரணமாக நீர்கொழும்புப் பிரதேச பள்ளிவாசல்களுக்குப் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யுமாறும் அவர்கள் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து நான் இராணுவத் தளபதியுடன் தொடர்பு கொண்டு இது தொடர்பில் கூறினேன். வேறு எதனையும் அவருடன் நான் பேசவில்லை” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading