Local

மாலைதீவு, நேபாளத்துக்கு டில்லி முன்னுரிமை – கொழும்புக்கு ‘வெட்டு’!

இந்திய வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 1000 கோடி ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள போதும், இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை.

இந்திய மத்திய அரசாங்கத்தின் 2019-20 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் பியூஸ் கோசலினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த வரவுசெலவுத் திட்டத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 16,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையை விட 1000 கோடி ரூபா அதிகமாகும்.

இதில், இந்திய வெளிவிவகார அமைச்சினால் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்காக, 6,447 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில், 5,545 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டில், இது, 902 கோடி ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த ஆண்டு 125 கோடி ரூபாவாக இருந்த மாலைதீவுக்கான நிதி ஒதுக்கீடு, இந்த ஆண்டு 575 கோடி ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் சபஹார் துறைமுக அபிவிருத்தித் திட்டத்துக்கு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 150 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில்,  2,650 கோடி ரூபா ஒதுக்கப்பட்ட பூட்டானுக்கான நிதி  உதவி இந்த ஆண்டில், 2,615 கோடி ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு, 325 கோடி ரூபாவும், பங்களாதேசுக்கு 175 கோடி ரூபாவாகவும், இலங்கைக்கு 150 கோடி ரூபாவும்,மொங்கோலியாவுக்கு 5 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியின் அளவுக்கு சமமானதாகும்.

கடந்த ஆண்டு 700 கோடி ரூபா ஒதுக்கப்பட்ட நேபாளத்துக்கு இம்முறை 750 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

மியான்மாருக்கான ஒதுக்கீடு, 280 கோடி ரூபாவில் இருந்து 400 கோடி ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading