Local

அரசமைப்பு நிறைவேற்றப்பட்டால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும்! – கடும் தொனியில் விமல் எச்சரிக்கை

“புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட்டால் அது விடுதலைப்புலிகளின் தமிழீழக் கனவை நனவாக்கியமைக்குச் சமனாகும். எனவே, இந்த நிலைமை ஏற்பட்டால் வடக்கு, கிழக்கில் மீண்டும் இரத்த ஆறு ஓடும். தமிழ் மக்கள் மீளவும் பேரவலங்களைச் சந்திக்க வேண்டி வரும். இவை வேண்டுமெனில் புதிய அரசமைப்பை அரசு நிறைவேற்றட்டும்.”

– இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச.

கொழும்பு ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“நாம் தமிழர்களுக்கு எதிரிகள் அல்லர். தமிழர்களும் எமக்கு எதிரிகள் அல்லர். ஆனால், வடக்கு, கிழக்கு மக்களின் வாக்குகளினால் நாடாளுமன்றத்துக்கு வந்த சம்பந்தனும் சுமந்திரனும் இன்று தமிழர்களுக்குத் துரோகம் செய்துள்ளார்கள்.

இருவரும் போலி வாக்குறுதிகளை வழங்கி தமிழர்களை ஏமாற்றி வருகின்றார்கள். ரணில் அரசைக் காப்பாற்றி வருகின்றார்கள்.

முப்பது வருடங்களாகப் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் வடக்கு, கிழக்கு சிக்குண்டு இருந்தது. இதனால் தமிழ் மக்கள் பெரும் அவலங்களைச் சந்தித்தார்கள்.

2009ஆம் ஆண்டு எமது இராணுவ வீரர்கள் தமது உயிர்களை அர்ப்பணித்து வன்னி மக்களை புலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுத்தார்கள்.

புலிகளின் பயங்கரவாதப் போருக்கு எமது படை வீரர்கள் முடிவு கட்டினார்கள். அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் வன்னி மக்களை மீட்கும் போராட்டம் மாபெரும் வெற்றிபெற்றது.

வன்னி மக்களை மீட்டெடுத்த தெய்வமாக மஹிந்த ராஜபக்ஷ விளங்குகின்றார்.

ஆனால், இதனைப் பொறுக்க முடியாத புலிகளின் புலம்பெயர் அமைப்புகள் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கும் இராணுவ வீரர்களுக்கும் ‘போர்க்குற்றவாளிகள்’ என்ற மோசமான பட்டத்தை வழங்கினார்கள்.

இந்தப் படம் ஐ.நாவிலும் எதிரொலித்தது. ஆனால், நாம் அஞ்சவில்லை. தலைநிமிர்ந்து நிற்கின்றோம்.

இன்று புலிகளின் புலம்பெயர் அமைப்புகளின் வலையில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு சிக்கியுள்ளது.

புலம்பெயர் அமைப்புகளினதும் சம்பந்தன் – சுமந்திரன் ஆகியோரினதும் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் புதிய அரசமைப்பை நிறைவேற்ற ரணில் அரசு முற்படுகின்றது, இதற்கு நாம் ஒருபோதும் இடமளியோம்.

நாட்டைப் பிளவுபடுத்தி இங்கு மீண்டும் புலிகளுக்கு புத்துயிர் கொடுக்க முற்படும் ரணில் அரசுக்கு விரைவில் நாம் முடிவு கட்டி மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறுவோம். ராஜபக்ஷ படையணியின் ஆட்சி மீண்டும் மலரும். இது உறுதி” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading