Local

வடக்கு, கிழக்கை கட்டியெழுப்ப உதவ வேண்டும் ஜப்பான் அரசு! – அந்நாட்டுத் தூதுவரிடம் சம்பந்தன் கோரிக்கை

“தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கொடூர போரால் சின்னாபின்னமாகின. இந்த மாகாணங்கள் தற்போதுதான் மெல்ல மெல்ல அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. எனவே, இந்த மாகாணங்களைத் துரித கதியில் அபிவிருத்தி செய்ய ஜப்பான் அரசு தம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்கவேண்டும்.”

– இவ்வாறு கோரிக்கை விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

“இந்த உதவிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழுள்ள வடக்கு – கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சின் ஊடாக வழங்கப்பட வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகிரா சுகியமா, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவரது கொழும்பு இல்லத்தில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

“வடக்கு, கிழக்கில் வேலைவாய்ப்புக்காக இளைஞர்கள் பலர் காத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகளையும் ஜப்பான் அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்” எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தச் சந்திப்பில் இலங்கையில் சர்வதேச சமூகத்தின் வகிபாகம், புதிய அரசமைப்பு மற்றும் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பிலும் பேசப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading