Local

கழுதையுடன் மோதிய இளைஞர் உயிரிழப்பு!

கற்பிட்டி பள்ளிவாசல்துறை ரெட்பானா வீதியில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கற்பிட்டி – கண்டல்குழி, அஷரப் நகரைச் சேர்ந்த முஹம்மது அகீல் (வயது 19) எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார் என கற்பிட்டி பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஈ.ஏ.டபிள்யூ. எஸ். எதிரிசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் வேலை செய்யும் குறித்த இளைஞர், விடுமுறையில் வீட்டுக்கு வந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

நேற்று தேவை நிமித்தம் குறித்த இளைஞர் பள்ளிவாசல்துறையிலிருந்து ரெட்பானா பிரதேத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வீதியைக் கடக்க முற்பட்ட கழுதை ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி வீதியில் கவிழ்ந்தது எனக் ௯றப்படுகின்றது.

இவ்விபத்தில் சிறு காயங்களுடன் அந்த இளைஞர் அங்கிருந்து மீண்டும் வீட்டுக்குச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு வீட்டுக்குச் சென்ற குறித்த இளைஞருக்கு கடும் வயிற்று வலியுடன், அதிகமாக வயிற்றோட்டமும் போயுள்ளது. இதனையடுத்து, உறவினர்கள் அந்த இளைஞரை உடனடியாக கற்பிட்டி வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

இவ்வாறு சேர்க்கப்பட்ட குறித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .

உயிரிழந்த இளைஞரின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகள் என்பன இடம்பெற்றன.

கற்பிட்டி, புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் மரண விசாரணைகளை நடத்தினார்.

விபத்து இடம்பெற்றபோது உடல் முழுவதிலும் இரத்தம் பரவியமையால் ஏற்பட்ட திடீர் மரணம் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதேவேளை, பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது உயிரிழந்த குறித்த இளைஞரின் வயிற்றில் சுமார் இரண்டு கிலோ கிராம் நிறையுள்ள புற்றுநோய்க் கட்டி ஒன்று உடைந்த நிலையில் காணப்பட்டது என கற்பிட்டி, புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading